இந்தியா

3 ஆண்டுகளில் விமான போக்குவரத்துத்துறையில் இத்தனை ஆயிரம் கோடிகள் நஷ்டமா? - அதிர்ச்சி தகவல்

3 ஆண்டுகளில் விமான போக்குவரத்துத்துறையில் இத்தனை ஆயிரம் கோடிகள் நஷ்டமா? - அதிர்ச்சி தகவல்

webteam

இந்தியாவில் கடந்த 2021 - 2022 நிதியாண்டில் விமான போக்குவரத்துத்துறை சுமார் 11ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டத்தை சந்தித்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக விமான போக்குவரத்துத்துறை 15000 முதல் 17,000 கோடி ரூபாய் வரை நஷ்டத்தை சந்திக்க இருப்பதாக தகவல்கள் சொல்லப்படுகிறது. அவை உண்மைதானா என மக்களவையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் திருநாவுக்கரசர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் நடப்பு நிதியாண்டிற்கான விமான போக்குவரத்து துறையின் வரவு செலவு கணக்கு என்பது இந்த நிதியாண்டின் இறுதியில்தான் தெரியும் என்றும் கடந்த மூன்று ஆண்டுகளை பொருத்தவரை நஷ்டம் என்பது தொடர்ந்து அதிகரித்து வந்திருப்பதையும் சுட்டிக்காட்டி உள்ளது.

கடந்த 2019 -20ஆம் நிதி ஆண்டில் சுமார் 4770 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், கொரோனா உச்சகட்டமாக இருந்த 2020- 21ஆம் நிதி ஆண்டில் 12,479 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பிறகு 2021 - 2022 நிதியா ஆண்டில் ஒட்டுமொத்த நஷ்டம் என்பது 11,658 கோடி ரூபாய் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய கொரோனா பாதிப்பு, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, விமான போக்குவரத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு விலை உயர்வு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மாற்றம், ரஷ்யா - உக்கரின் இடையிலான போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பயணிகளுக்கு கொடுக்கும் சேவைக்கு ஆகும் செலவை விமான நிறுவனங்களால் ஈடுகட்ட முடியாமல் இருந்திருக்கிறது எனவும் மத்திய அரசு சுட்டிக்காட்டி உள்ளது.