இந்தியா

பெட்ரோல் பங்கில் எவ்வளவு பெரிய க்யூ...!

பெட்ரோல் பங்கில் எவ்வளவு பெரிய க்யூ...!

rajakannan

கேரளாவில் கடந்த 8ஆம் தேதி முதல் கனமழை பெய்துவருகிறது. இடுக்கி, எர்ணாகுளம், வயநாடு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முப்படை வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தில் தத்தளிப்பவர்கள் படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். உணவு, குடிநீரின்றி தவிக்கும் மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கேரளாவில் படிபடியாக மழை குறையத் தொடங்கியுள்ளது. சில மாவட்டங்களில் லேசாக இயல்பு நிலை திரும்பி வருகின்றது. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் அனைத்து தரப்பினராலும் துரிதமாக செய்யப்பட்டு வருகின்றன. மக்கள் தங்களது அத்தியாவசிய பொருட்களை வாங்கத் தொடங்கியுள்ளனர்.

அதிக அளவு வெள்ள பாதிப்புக்கு உள்ளான திரிச்சூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரமாக மழை இல்லை. மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகிறார்கள். மக்களின் முக்கிய தேவையாக பெட்ரோல், டீசல் வாங்க பங்குகளுக்கு படையெடுத்துள்ளனர். இதனால், பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்துக் கிடக்கின்றன.