இந்தியா

”இவங்களுக்லாம்தான் வாடகைக்கு வீடு.. மத்தவங்கலா ஓடு” - பெங்களூரு ஹவுஸ் ஓனர்ஸ் அட்டூழியம்!

”இவங்களுக்லாம்தான் வாடகைக்கு வீடு.. மத்தவங்கலா ஓடு” - பெங்களூரு ஹவுஸ் ஓனர்ஸ் அட்டூழியம்!

JananiGovindhan

சொந்த வீடு வாங்குவதை காட்டிலும் வாடகைக்கு வீடு தேடுவதே குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. அதுவும் மெட்ரோ நகரங்களில் வாடகை வீட்டில் குடியேற வேண்டுமென்றால் எக்கச்சக்கமான கெடுபிடிகளையெல்லாம் சகித்துக் கொள்ளக் கூடிய நிலையே இருக்கும்.

கரன்ட் பில், மெயின்ட்டனென்ஸ், ஆணி அடிக்கக் கூடாது, தண்ணீர் பயன்பாடு, உணவு பழக்கம் என நீளும் பட்டியலை தாண்டி ஏறி இறங்கும் ஒவ்வொரு வீட்டிலும் தான் இந்த சமூகத்தைச் சார்ந்தவர்தான் என போர்டு போடாத குறையாக கூறி வருவது கூடவே தொடரும் சங்கடமே இன்றைக்கு பலரும் சந்திக்கும் சூழலாக இருக்கிறது.

இதையெல்லாம் ஒருவழியாக கடந்து வந்தாலும் இந்த கல்லூரியில், இந்த கல்வி நிறுவனத்தில் படித்தவர்களுக்கு மட்டும்தான் வீடு வாடகைக்கு கொடுப்போம் என்று கண்டிஷன் போடுவது எந்தளவுக்கு நியாயமாக இருக்கும் என தெரியவில்லை என அண்மையில் ட்விட்டரில் பகிரப்பட்டு பதிவின் மூலம் நெட்டிசன்கள் புலம்பித் தள்ளுகிறார்கள்.

அதன்படி, இந்தியாவின் டெக் நகரமாக இருக்கும் பெங்களூருவில்தான் இப்படியான சம்பவம் நடந்திருக்கிறது. பொதுவாக வாடகைக்கு குடியேறுவோரிடம் வீட்டு உரிமையாளர்கள் என்ன சமூகம், திருமணமானவரா, உணவு பழக்கம் குறித்துதான் கேள்வி கேட்பார்கள். ஆனால் பெங்களூருவில் தற்போது வாடகைதாரர் என்ன பல்கலைக்கழகத்தில் படித்திருக்கிறார், அவரது லிங்க்ட் இன் கணக்கு விவரம் இதையெல்லாம் கேட்க தொடங்கியிருக்கிறார்கள்.

அதன்படி, பிரியான்ஷ் என்ற ஒருவர் பெங்களூருவின் இந்திரா நகர், டோம்லூர், HAL ஆகிய பகுதிகளில் வாடகைக்கு வீடு தேடி வந்திருக்கிறார். இதற்காக முகவரையும் அணுகியிருக்கிறார். ஆனால் அந்த முகவரோ ஐ.ஐ.டி அல்லது ஐ.ஐ.எம்மில் படிக்காததால் பிரியான்ஷை நிராகரித்திருக்கிறார் என்பதுதான் வியப்படை ஏற்படுத்தக் கூடியதாக இருந்திருக்கிறது.

இதுகுறித்த சாட்டிங்கில், அந்த முகவர் பிரியான்ஷின் பின்புலம் என்ன, எங்கு படித்தார் என்றெல்லாம் கேட்டிருக்கிறார். அதற்கு பிரியான்ஷ், தான் வேலூர் வி.ஐ.டி பல்கலையில் படித்ததாகவும், பெங்களூருவில் உள்ள Atlassian நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும் கூறியிருக்கிறார். அதற்கு அந்த முகவர், “IIT/IIMல் படித்திருக்காததால் சாரி, உங்கள் புரொஃபைல் பொருந்தவில்லை” எனக் குறிப்பிட்டு நிராகரித்திருக்கிறார்.

இந்த சாட் ஸ்க்ரீன் ஷாட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பிரியான்ஷ், “ஃப்ளாட் ஓனர்களே, ஏன் இப்படியெல்லாம் பண்றீங்க? எனக்கு வீடு வாடகைக்கு கொடுத்தால் போனஸாக ஹவுஸ் பார்ட்டி எப்படி செய்வது, கேம்ஃப்யரில் கிட்டார் வாசிப்பதெல்லாம் சொல்லித் தருவேன்” என பதிவிட்டிருக்கிறார்.

இந்த பதிவைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கு நடந்த சில சம்பவங்களின் ஸ்கீரின்ஷாட்களையும் பகிர்ந்திருக்கிறார்கள். அதில், வயசு, முழு சம்பள விவரம் கேட்டதோடு நிற்காமல், காதலி இருக்கிறாரா என்றெல்லாம் கேட்கப்பட்டிருக்கிறது.