மகளுடன் ஓம் பிர்லா எக்ஸ் தளம்
இந்தியா

'UPSC தேர்வு' எழுதாமலேயே ஐஏஎஸ் அதிகாரி ஆனாரா? - சர்ச்சை குறித்து ஓம் பிர்லா மகள் கொடுத்த விளக்கம்!

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் மகள், தேர்வு எழுதாமலேயே ஐஏஎஸ் அதிகாரியானதாக பரவிய தகவலை, அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

PT WEB

18வது நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காததால் பாஜக, தன்னுடைய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. மக்களவை சபாநாயகராக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஓம் பிரலாவே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் மக்களவை சபாநாயகரான பதவியேற்றுள்ள ஓம் பிர்லா கடந்த நாட்களாகப் பேசுபொருளாக மாறியுள்ளார். அதற்குக் காரணம், அவரது இளைய மகள் அஞ்சலி பிர்லா கடந்த 2019ஆம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றிருப்பதுதான். தொடர்ந்து அகாடமியில் பயிற்சி பெற்று ஐஏஎஸ் ஆன அஞ்சலி பிர்லா, தற்போது ரயில்வே அமைச்சகத்தின்கீழ் பணியாற்றி வருகிறார். தனது வெற்றி குறித்து தற்போது PTIக்கு பேட்டியளித்துள்ள அஞ்சலி பிர்லா, தந்தை ஓம் பிர்லாவின் பொதுச் சேவையே சிவில் சர்வீஸ் எழுத தனக்கு உந்துசக்தியாக இருந்தது. மேலும் நாட்டு மக்களுக்காக தனது தந்தை செய்துவரும் சேவையைப்போல தானும் இந்தச் சமுதாயத்துக்காக ஏதாவது செய்ய விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அஞ்சலி பிர்லா, முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றிருப்பது பேசுபொருளாகி வருகிறது. அவர், தேர்வு எழுதாமலேயே வெற்றிபெற்றிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: மீண்டும் குப்பைப் பலூன்கள்| தென்கொரியாவுக்குப் பதிலடி கொடுத்த வடகொரியா!

இந்தியாவில் நேரடியாக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட உயர்பதவிகளை பெற வேண்டும் என்றால், மத்திய தேர்வாணையம் நடத்தும் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். யுபிஎஸ்சி தேர்வு எழுதுவோர் 3 நிலைகளைத்தாண்டித்தான் தேர்ச்சியடைய முடியும். அதாவது, யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பம் செய்வோர் முதலில் முதல்நிலை தேர்விலும், இரண்டாவதாக முதன்மை தேர்வுகளிலும் தேர்ச்சியடைய வேண்டும். அதன்பிறகு நேர்க்காணலிலும் (இண்டர்வியூ) அவர்கள் பங்கேற்று சிறப்பாக செயல்பட வேண்டும். இந்த 3 படிநிலைகளை தாண்டினால் தான் ஒருவரால் நேரடியாக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் பணிகளில் அமர முடியும். இப்படி கடினமான தேர்வில், ஒருசிலர்தான் முதல் முயற்சியிலேயே வெற்றிபெறுகிறார்கள். ஆனால், பலர் 2, 3, 4வது முயற்சிகளில்தான் வெற்றி பெறுகிறார்கள். இன்னும் பலரோ, தொடர்ந்து யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சியடைய முடியாமல் தவிக்கின்றனர்.

இதை மையப்படுத்தித்தான் அஞ்சலி பிர்லாவின் தேர்ச்சி குறித்தும் கேள்வி எழுந்துள்ளது. ஏற்கெனவே நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வில், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி என பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ள நிலையில், யுபிஎஸ்சி தேர்விலும் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பிருக்கலாம் என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதையும் படிக்க: கர்நாடகா| 7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம்.. பெற்றோர்கள் எதிர்ப்பு!