pm modi, rahul gandhi pt web
இந்தியா

மக்களவைத் தேர்தல் 2024 - பாஜக Vs INDIA Bloc |எப்படி உள்ளது குஜராத் தேர்தல் களம்.. யாருக்கும் சாதகம்?

PT WEB

தமிழகம், கேரளாவை தொடர்ந்து ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் பெரிய மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. இங்குள்ள 26 தொகுதிகளுக்கும் வரும் 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

குஜராத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளிலும் பாரதிய ஜனதா போட்டியிடுகிறது. காங்கிரஸ் 24 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான ஆம்ஆத்மி 2 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

கடந்த தேர்தல்களில் நடந்ததென்ன?

நாட்டில் தற்போது பாஜக மிக வலிமையாக உள்ள மாநிலங்களில் குஜராத்துக்கே முதலிடம் என கூறலாம். இங்கு 1989ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற 9 மக்களவை தேர்தல்களிலும் பாஜகவே அதிக இடங்களை பிடித்துள்ளது. 2009ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 15 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும் வென்றன. 2014, 2019ஆம் ஆண்டுகளில் அனைத்து 26 தொகுதிகளிலும் பாஜகவே வெற்றிபெற்றது. சட்டப்பேரவையை பொருத்தவரை 1998ஆம் ஆண்டிலிருந்தே பாரதிய ஜனதாவின் ஆட்சி குஜராத்தில் நடைபெற்று வருகிறது.

குஜராத் - பாஜக

மத்திய பாஜக அரசில் பிரதமர் மோடிக்கு அடுத்த இடத்தை வகிக்கும் அமித் ஷா, காந்தி நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இது வாஜ்பாய், அத்வானி ஆகியோர் வெற்றிபெற்ற தொகுதி ஆகும். மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ருபாலா ராஜ்கோட் தொகுதியில் போட்டியிடுகிறார். மாநிலங்களவை எம். பி.ஆன இவர் 22 ஆண்டுகளுக்கு பின் தேர்தல் களம் காண்கிறார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா போர்பந்தரில் போட்டியிடும் நிலையில், மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் நவ்சாரி தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரசை பொறுத்தவரை முன்னாள் மத்திய இணையமைச்சர் துஷார் சவுத்ரி சபர்கந்தா தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் பரேஷ் தனானி ராஜ்கோட் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அனைத்து தொகுதிகளிலும் 5 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல இலக்கு நிர்ணயித்து பாஜக பரப்புரை மேற்கொண்டுள்ளது. சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரின் மனு ஏற்கப்படாததாலும் பிற வேட்பாளர்கள் வாபஸ் பெற்றதாலும் பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் தேர்வில் கடுமையான அதிருப்தி நிலவுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

5 எம்.பி.க்களுக்கு பாஜக வாய்ப்பு மறுத்துள்ளது. ரயில்வே இணையமைச்சர் தர்ஷணா ஜர்தோஷும் வாய்ப்பு கிடைக்காதவர்களில் ஒருவர். மறுபுறம் வலிமையான பாஜகவை வீழ்த்த ஆம் ஆத்மி கட்சியுடன் கைகோர்த்து களமிறங்கியுள்ளது காங்கிரஸ்.

மத்தியிலும் மாநிலத்திலும் அரசுக்கு எதிரான மன நிலை கடுமையாக இருப்பதாகவும் அதை பயன்படுத்தி கணிசமான வெற்றியை ஈட்ட இயலும் என காங்கிரஸ் நம்புகிறது.