தேர்தல் ஆணையம் ட்விட்டர்
இந்தியா

முதல்வர் படம் அகற்றம்.. நடைமுறைக்கு வந்தது மக்களவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் - கட்டுப்பாடுகள் என்ன?

மக்களவைத் தேர்தலுக்கான நடைமுறை விதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Prakash J

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, அதற்கான 18வது மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் 4 மாநில (ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம்) சட்டப் பேரவைகளுக்கும், தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 4 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

மக்களவை தேர்தல்

மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் அதற்கான தேர்தல் அதிகாரிகள் அதற்கான நடவடிக்கையில் முழுவீச்சில் இறங்கி உள்ளனர்.

தேர்தல் நடைமுறைகள் மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து செய்தியாளர்களிடம் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் கூறியுள்ளதை பார்க்கலாம்,

  1. “வாக்குச் சாவடிகளில் தேவையான் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.

  2. சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்யலாம். ஆனால் போலிச் செய்திகளைப் பரப்பக்கூடாது.

  3. சமூக விரோதிகளுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை பாயும். பணம், பொருட்கள், மது விநியோகம் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

  4. வாக்குக்கு பணம் பொருள் கொடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

  5. தேர்தலில் இயன்வரை வன்முறைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  6. ட்ரோன மூலம் மாநில எல்லைகள் கண்காணிக்கப்படும். நாடும் முழுவதும் சோதனைச் சாவடிகள் மூலமாகவும் கண்காணிக்கப்படும்.

  7. வேட்பாளர்கள் பற்றிய விவரங்களை செயலிகள் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படும். பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் வருமானவரித் துறையினர் கண்காணிப்பார்கள்.

  8. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முழுவதுமாகக் கண்காணிக்கப்படும்.

  9. சமூக வலைதளங்களில் அரசியல் கட்சியினர் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அரசில் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரையில் கண்ணியத்துடன் ஈடுபட வேண்டும்.

  10. மதரீதியாகவோ தனிப்பட்ட முறையிலோ விமர்சித்து பரப்புரையில் ஈடுபடக்கூடாது. விளம்பரங்களை நம்பத்தகுந்த செய்தியாக்க முயற்சிக்கக் கூடாது.

  11. தேர்தல் பரப்புரையில் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை ஈடுபடுத்தக்கூடாது.

  12. நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.