இந்தியா

“சமூக தளங்களே 5% வாக்குகளை தீர்மானிக்கும்” - இன்ஃபோசிஸ் நிறுவனர் கருத்து

“சமூக தளங்களே 5% வாக்குகளை தீர்மானிக்கும்” - இன்ஃபோசிஸ் நிறுவனர் கருத்து

rajakannan

நாடாளுமன்றத் தேர்தலில் 4 முதல் 5 சதவிகிதம் வாக்குகள் எந்தக் கட்சிக்கு செல்லு‌ம் என்பதை சமூக ஊடகப் பதிவுகளே தீர்மானிக்கும் எனத் தகவல் வெளி‌யாகியுள்ளது. 

இன்ஃபோசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர்களின் ஒருவரும் தகவல் தொழில்நுட்ப வல்லுநருமான மோகன்தாஸ் பய் இக்கருத்தை தெரிவித்துள்ளார். சமூகவலைத்தள தகவல் அடிப்படையில் முடிவாகும் 4 முதல் 5% வாக்குகள் ‌கணிசமான தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் அம்சமாகவும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இளம் தலைமுறையினர் குறிப்பாக முதன்முறை வாக்காளர்கள் தகவல் அறிவதற்காக பெரும்பாலும் யு டியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களையே நாடுவதாக அவர் குறிப்பிட்டார். எனவே, இளம் தலைமுறையினரை ஈர்க்கும் அம்சங்கள் என்ன? அவர்களின் உணர்வுகள் என்‌ன? என்பதை அறிய வேண்டிய அவசியம் கட்சிகளுக்கு இருப்பதாக மோகன்தாஸ் பய் தெரிவித்தார்.

மேலும், மோகன்தாஸ் பய் கூறுகையில், “இளைஞர்களை எது கவர்கிறது என்பது குறித்து அரசியல் கட்சிகள் ஆய்வு செய்ய வேண்டும். இளம் வாக்காளர்களில் 40 முதல் 50 சதவீதம் பேர் சமூக வலைத்தளங்களால் வழிநடத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு முதனமையான தகவல்கள் அங்குதான் கிடைக்கின்றன. இளைஞர்கள் டிவி பார்ப்பதில்லை. அவர்கள் வீடியோ மட்டுமே பார்க்கிறார்கள். யுடியூப் பார்க்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் செய்திதாள்களை படிப்பதில்லை. சமூக வலைத்தளங்கள் இருப்பதை நம்புவர்கள், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை நம்புவதில்லை” என்றார்.