இந்தியா

'மேகதாதுவுக்கு பதில் ஒகேனக்கலில் அணை கட்டலாம்' - தம்பிதுரை ஐடியா

webteam

கர்நாடகாவின் மின் தேவைக்கு மேகதாதுவில் அணை கட்டுவதை விட, ஒகேனக்கலில் அணை கட்டலாம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையில் புதிய காவல்நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதனை இன்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தம்பிதுரை, “மேகதாதுவில் அணை கட்ட கூடாது. காவிரி மேலாண்மை வாரியம், உச்ச நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்த பிறகும் மேகதாதுவில் அணை கட்டும் முயற்சி தேவையற்றது. 

கர்நாடக மாநில மக்களவை தேர்தலை மனதில் வைத்து காங்கிரஸ் அரசும், பாஜக அரசும் அரசியல் காரணத்தால் மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கின்றனர். பாஜகவும், காங்கிரசும் மாநில கட்சிகளாக மாறிக்கொண்டுள்ளன. தேசம் என்பதில் தமிழகத்தின நலனையும் பார்க்க வேண்டும். அந்த நிலையில் பாஜகவும் இல்லை. காங்கிரசும் இல்லை. இதனாலேயே அவர்கள் பல மாநிலங்களில் வெற்றி பெற முடியவில்லை.

மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு உதவி செய்தால், தேச நலன் பாதிக்கும். தமிழக நலன் பாதிக்கும். தமிழக மக்கள் இதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஒகேனக்கலில் அணை கட்டி மின்சாரம் தயாரித்து கர்நாடகாவுக்கு தர வேண்டும் என அப்போது எம்ஜிஆர் கூறினார். பெங்களூருக்கு தேவையான தண்ணீரை கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். எனவே எங்கள் கருத்து ஒகேனக்கலில் அணை கட்ட வேண்டும், மேகதாதுவில் கட்டக் கூடாது” என்றார். மேலும் அதுவே அதிமுகவின் கொள்கை என்றும் அவர் தெரிவித்தார்.