இந்தியா

மகாராஷ்டிராவில் சில தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

webteam

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பலகட்டங்களாக ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. ஆறாம்கட்ட பொதுமுடக்கம் நிறைவடையும் நேரத்தில், அடுத்தகட்டமாக  மகாராஷ்டிராவில்  ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாநிலமும் தங்களுடைய நிலைக்கு ஏற்றவாறது, சில குறிப்பிட்ட தளர்வுகளுடன் பொது முடக்கத்தை அறிவித்துவருகின்றன. மகாராஷ்டிர மாநிலத்தில் சில கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  

அங்கு மால்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட் வளாகங்களை ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் காலை 9 மணி முதல் இரவு 7 வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள மகாராஷ்டிர மாநில தலைமைச்செயலர் சஞ்சய்குமார், கொரோனா பரவலைத் தடுப்பது மற்றும்  கட்டுப்படுத்துவதற்கான அவசரகால நடவடிக்கையாக ஊரங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  

சினிமா தியேட்டர்கள், ஃபுட் கோர்ட், உணவகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருக்கும். மால்களில் செயல்படும் உணவகங்களில் பார்சல்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். மருத்துவமனைகள், கருவூலங்கள், பேரிடர் மேலாண்மை, காவல்துறை, நகராட்சி நிர்வாகங்கள் அவசர சேவைகள், அரசு அலுவலங்கள் ஆகியவை 15 சதவீத ஊழியர்களுடன் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைப் பொறுத்தவரையில் மகாராஷ்டிர மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது.