நாடு முழுவதும் சிவப்பு மண்டலமாக 130, ஆரஞ்சு மண்டலமாக 284, பச்சை மண்டலமாக 119 மாவட்டங்கள் என தனித்தனியே பிரிக்கப்பட்டு புதிய விதிமுறைகளை அமல்படுத்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இனி வரும் 21 நாட்களுக்கு கொரோனா தொற்று இல்லாத மாவட்டம் பச்சை மண்டலமாக மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் விமானம், ரயில், மெட்ரோ ஆகியவை அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பச்சை மண்டலங்களில் 50 சதவீத இருக்கை வசதிகளுடன் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் சிவப்பு மண்டலங்களில் ஆட்டோ மற்றும் டாக்சிகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இந்தச் சிவப்பு மண்டலங்களில் சலூன்கள் இயங்கவும் தடை போடப்பட்டுள்ளது. சிவப்பு மண்டலங்களில் அனுமதிக்கப்பட்ட விஷயங்களுக்காக கார்களில் அதிகபட்சம் இரண்டு பேர் செல்லலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரைச் சென்னை, மதுரை, நாமக்கல், தஞ்சை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், ராணிப்பேட்டை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல் திருவாரூர், வேலூர், காஞ்சிபுரம் ஆகியவையும் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் தென்காசி, நாகை, திண்டுக்கல், விழுப்புரம், கோவை, கடலூர், சேலம், கரூர், தூத்துக்குடி ஆகியவை ஆரஞ்சு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி மட்டுமே பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.