இந்தியா

முடிவுக்கு வரும் ஊரடங்கு 4.0: மே 31-க்கு பிறகு மாநில அரசுகளே முடிவெடுக்க வாய்ப்பு?

முடிவுக்கு வரும் ஊரடங்கு 4.0: மே 31-க்கு பிறகு மாநில அரசுகளே முடிவெடுக்க வாய்ப்பு?

webteam

நான்காம் கட்ட ஊரடங்கிற்கு பின்னர் எதிர்கால கட்டுப்பாடுகள் குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவு செய்ய மத்திய அரசு அனுமதி கொடுக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, அடுத்தடுத்ததாக தற்போது வரை 4 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு 4.0 காலத்திற்குள், உள்நாட்டு விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் மெட்ரோ சேவைகளும் விரைவில் தொடங்கப்படலாம் எனத்தெரிகிறது. நான்காம் கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், 5வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. தற்போது, ஊரடங்கு அமலில் இருந்தாலும், பல்வேறு தளர்வுகளை, அரசு அறிவித்து உள்ளது.

இந்நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கிற்கு பின்னர் எதிர்கால கட்டுப்பாடுகள் குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவு செய்ய மத்திய அரசு அனுமதி கொடுக்க முடிவு செய்துள்ளதா தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் சர்வதேச விமான போக்குவரத்து, மற்றும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஆகிவயற்றை மட்டும் மத்திய அரசு தொடர்ச்சியாக நீட்டிக்க வாய்ப்பள்ளதாக கூறப்படுகிறது.

ஜூலை மாதத்திற்கு முன்னர் சர்வதேச விமான சேவை தொடங்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் ஜூலை மாதவாக்கில்தான் பள்ளிகள் திறப்பும் இருக்கும் என்று  கூறப்படுகிறது.