இந்தியா

50 தொழிலதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி வாரா கடன் தள்ளுபடி..!

50 தொழிலதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி வாரா கடன் தள்ளுபடி..!

jagadeesh

நீரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் 68 ஆயிரம் ரூபாய் கோடி வாராக் கடனை ரிசர்வ் வங்கி தள்ளுபடி செய்துள்ளது.

நாடாளுமன்றத்தில் அண்மையில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய வங்கிகளில் அதிக அளவு கடன் பெற்று திருப்பி செலுத்தாத 50 பேரின் பட்டியலை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு ஆளுங்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது.

இந்த நிலையில், சாகேத் கோகலே என்பவர், வங்கி கடன் மோசடி பட்டியலில் முதல் 50 இடங்களில் இருப்பவர்களின் விவரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு ரிசர்வ் வங்கியிடம் மனு அளித்தார். இதற்கு கடந்த 24 ஆம் தேதி ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில், முதல் 50 இடங்களில் இருப்பவர்களின் பட்டியலையும், அவர்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் வரை அளிக்கப்பட்ட கடன் தள்ளுபடி விவரங்களையும் தெரிவித்துள்ளது.

மொத்தமாக 68 ஆயிரத்து 607 கோடி ரூபாய் வாராக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் ஐந்தாயிரத்து 492 கோடி ரூபாயும், ஆர்.இ.ஐ. அக்ரோ நிறுவனத்தின் நான்காயிரத்து 314 கோடி ரூபாயும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு சொந்தமான ருச்சி சோயா நிறுவனத்தின் இரண்டாயிரத்து 212 கோடி ரூபாயும், விஜய் மல்லையாவின் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஆயிரத்து 943 கோடி ரூபாயும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.