உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, ராமர் பிறந்த இடம் என நம்பப்படும் அயோத்தியின் ராம ஜென்ம பூமியில் பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி நடைபெற்ற இக்கோயிலின் பூமி பூஜையில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, கட்டுமானப் பணிகளைத் தொடக்கிவைத்தார்.
இந்தக் கோயிலின் கட்டுமான பணிக்காக ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த சேக்ஷத்ரா அறக்கட்டளையின் சார்பில் ரூ.2000 கோடிக்கும் அதிகமாக நிதி பெறப்பட்டு ராமர் கோவில் அமைக்கும் பணி வேகமெடுத்து வருகின்றன. அத்துடன், இதன் திறப்பு விழா குறித்த அறிவிப்பையும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அதன்படி, இக்கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிந்து அடுத்த வருடம் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் எனவும், அன்றைய தினமே ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இம்மாத இறுதிக்குள் பணிகள் முடிவுக்கு வரும்வகையில் இரவு பகலாக பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இக்கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளில் கலந்துகொள்ள இருக்கும் நபர்கள் குறித்த ஒரு பட்டியலும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, இக்கோயில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
மேலும், கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வருமாறு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேக்ஷத்ரா அறக்கட்டளையால் 7,000 பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதில், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கெளதம் அதானி, ரத்தன் டாடா, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, விராட் கோலி, ரோகித் சர்மா, நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், கங்கனா ரணாவத் உள்ளிட்ட 3,000 முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் உள்ள மதத் தலைவர்கள், முன்னாள் பாதுகாப்புப் படை வீரர்கள், முன்னாள். ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், கவிஞர்கள், இசைக் கலைஞர்கள், பத்மஸ்ரீ, பத்ம பூஷண் விருதாளர்கள், ஹிந்து அமைப்பின் நிர்வாகிகள் என மொத்தம் 4000 பேருக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மதிப்பிற்குரிய விருந்தினர்களின் பட்டியலில் உலகெங்கிலும் உள்ள 50 வெளிநாடுகளைச் சேர்ந்த ஒரு பிரதிநிதி கலந்து கொள்ளவுள்ளார். ராமர் கோயில் இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்த கரசேவகர்களின் குடும்பங்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில், ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிலும் இருவரும் கலந்துகொள்ள மாட்டார்கள் எனக் கோயில் அறக்கட்டளை தெரிவித்திருக்கிறது. இதுகுறித்துப் பேசிய ராம் மந்திர் அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய், ”பிரதமர் மோடி தலைமையில், ஜனவரி மாதம் 22ஆம் தேதி மதியம் 12:45 மணிக்குள் ராமர் கோயிலின் கருவறையில் குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கான பணிகளை, ஸ்ரீராம ஜென்ம பூமி ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டுவருகிறது. இதில், பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் உடல்நிலை, வயது காரணமாக அடுத்த மாதம் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள மாட்டார்கள். அவர்களின் வயதைக் கருத்தில்கொண்டு, அவர்கள் இருவரையும் வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அதை இருவரும் ஏற்றுக்கொண்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்து மக்களின் நம்பிக்கையாக உள்ள உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி பகுதியில்தான் ’ராமர் கோயில்தான் கட்டப்பட வேண்டும்' என பல்வேறு இந்து அமைப்புகள் முன்னெடுத்தன. இந்த பிரசாரத்தை முன்னின்று நடத்தியவர்களில் பாஜக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் அடக்கம். முன்னதாக, இதற்கான பூமி பூஜையில் இவர்கள் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.