காதல் என்றாலே ரோமியோ - ஜூலியட், லைலா - மஜ்னு, அம்பிகாபதி - அமராவதி என பல கதைகள் நம் நினைவுக்கு வரும். தற்போது காதல் என்ற வார்த்தையின் அர்த்தமே மாறிவிட்டது. ஆனால் இந்த காலத்திலும் ’வரலாற்று காதல்களுக்கு எங்கள் காதல் சற்றும் சளைத்ததல்ல’ என்பதை உணர்த்தும் விதமாக மறைந்தும் வாழ்கிற ஒரு காதல் கதை இருக்கிறது. ஒன்றாக இருந்தபோது எப்படி வாழ்ந்தார்கள் என்பது நமக்கு தெரியாது. ஆனால் உலகைவிட்டு பிரிந்த மனைவியின் மீது கொண்டிருந்த காதலை வெளிப்படுத்திய ஒரு இலக்கியவாதியின் கதைதான் இது.
பீகாரைச் சேர்ந்தவர் போலநாத் அலோக். இலக்கியவாதியான இவரது மனைவி பத்மா ராணி 1990ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி உயிரிழந்தார். தனது காதல் மனைவியின் நினைவாக அவரது அஸ்தி பானையை வீட்டின் முன்பிருக்கும் மாமரத்தில் பட்டுத்துணியில் கட்டி தொங்கவிட்டிருந்தார் போலாநாத். தினமும் காலை எழுந்தவுடன் மாமரத்தில் தொங்கவிட்டிருக்கும் அஸ்தியிடம் செல்லும் போலாநாத் தினமும் அஸ்திமீது ஒரு ரோஜாப்பூவை வைத்து குனிந்து வணங்கிவிட்டு, தூபக்குச்சிகளை வைத்து வழிபடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
மேலும் தான் இறந்தபிறகு தனது சடலத்தின்மீது மனைவியின் அஸ்தி பானையை வைத்துதான் தனது உடலை எரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை குடும்பத்தாரிடம் வைத்திருந்துள்ளார் போலாநாத். அப்போதுதான் தனது மனைவியுடன் தான் சேர்ந்தே இருப்பார் என்ற நம்பிக்கையில் அவ்வாறு கூறியுள்ளார்.
இந்நிலையில் 2022ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி போலாநாத் உலகைவிட்டு பிரிந்தார். இறந்தபிறகு மனைவியின் அஸ்தியை தனது உடல்மீது வைத்து எரிக்கவேண்டும் என்ற அவருடைய கடைசி ஆசையை நிறைவேற்ற தவறிவிட்டனர் அவரது குடும்பத்தினர். ஆனால் அதைவிட மகத்தான ஒரு செயலை செய்துள்ளதாக நெகிச்சி பொங்குகிறார் போலாநாத்தின் மருமகன் அஷோக் சிங். அவர் என்ன செய்திருக்கிறார் என்பதை அவரே விளக்குகிறார்.
“எனது மாமனாரின் காதல் மற்றும் மனைவி மீதான அர்ப்பணிப்பு எங்களுக்கு காதலின் முக்கியத்துவத்தை குறித்து உணர்த்தியிருக்கிறது. எனது மாமனார் இந்த உலகைவிட்டு பிரிந்தபிறகு அவரது காதல் கதை முடிவுக்கு வந்திருக்கும் என மக்கள் நினைக்கின்றனர். ஆனால் அதன்பிறகுதான் ஒரு புதிய காதல் கதை பிறந்திருக்கிறது. எனது மாமனாரின் இறப்புக்கு பிறகு அவரது அஸ்தியை, அவருடைய காதல் மனைவியின் அஸ்தியுடன் கலந்துவிட்டோம். தற்போது அதே மாமரத்தில் மாமியார் அஸ்தி மட்டும் இருந்த இடத்தில் இருவரும் அஸ்தியும் கலந்த பானை கட்டப்பட்டுள்ளது.
மாமனார் இப்போது உலகில் இல்லை. ஆனால் அவருடைய பாரம்பரியத்தை இன்றும் பின்பற்றுகிறோம். வீட்டு உறுப்பினர்கள் யார் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்குள் வந்தாலும் அஸ்திக்கு மரியாதை செலுத்திவிட்டு உள்ளே வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்” என்கிறார்.
உலகைவிட்டு பிரிந்தவுடன் முடிந்ததென்று நினைத்த காதல் கதை மீண்டும் போலாநாத்தின் குடும்பத்தினரால் திருத்தியமைக்கப்பட்டிருக்கிறது.
நீயும் நானும் சேர்ந்திருந்தோம்
நிலவும் வானும் போலே
நான் நிலவு போலத் தேய்ந்து வந்தேன்
நீ வளர்ந்ததாலே..
- கண்ணதாசன்