இந்தியா

இந்தியாவில் கல்வியறிவுள்ள பெண்களின் கருவுறுதல் விகிதம் குறைந்தது

இந்தியாவில் கல்வியறிவுள்ள பெண்களின் கருவுறுதல் விகிதம் குறைந்தது

webteam

இந்தியாவில் கல்வியறிவுடைய பெண்களின் கருவுறுதல் விகிதம் குறைந்துள்ளதாக மாதிரி பதிவு அறிக்கை தெரிவித்துள்ளது.

மாதிரி பதிவு அறிக்கை(Sample Registration System) என்னும் அறிக்கையை இந்திய பதிவாளர் ஜென்ரல் அலுவலகம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுவது வழக்கம். இந்த அறிக்கையில் கருவுறுதல் விகிதம் மற்றும் இறப்பு விகிதம் ஆகியவற்றை மாநில மற்றும் தேசிய அளவில் கணக்கிட்டு வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் 2017ஆம் ஆண்டின் அறிக்கையை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி 2017ஆம் ஆண்டு இந்தியாவில் பெண்களின் கருவுறுதல் விகிதம் 2.2 ஆக குறைந்துள்ளது. இதற்கு முன்பு 2013 முதல் 2016 வரை பெண்களின் கருவுறுதல் விகிதம் 2.3 ஆக இருந்தது. இந்த விகிதம் தற்போது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு குறைந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் பெண்கள் கருவுறுதல் விகிதம் 3.2 ஆக இருப்பதாக அறிக்கை தெரிவித்துள்ளது. 

நாட்டிலேயே தென் மாநிலங்களான தமிழ்நாடு(1.6), ஆந்திர பிரதேசம்(1.6), கேரளா(1.7), தெலுங்கானா(1.7), கர்நாடகா(1.7) ஆகிய மாநிலங்கள் பெண்கள் கருவுறுதல் விகிதம் குறைவாக பதிவாகியுள்ளது. மேலும் இந்த அறிக்கையில் பெண்களின் கருவுறுதல் விகிதம் குறைவானதற்கு அவர்களின் கல்வியறிவே காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏனென்றால் நாட்டிலேயே அதிக கருவுறுதல் விகிதம் கொண்ட பீகார் மாநிலத்தில் 26.8 சதவிகித பெண்கள் கல்வியறிவு இல்லாமல் உள்ளனர். அதேசமயம் குறைவான கருவுறுதல் கொண்ட மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் வெறும் 0.7 சதவிகித பெண்களே கல்வியறிவு இல்லாமல் உள்ளனர். அத்துடன் தேசியளவில் 2017ஆம் ஆண்டில் கல்வியறிவு உள்ள பெண்களின் கருவுறுதல் விகிதம் 2.1 ஆக இருந்தது. ஆனால் இதே கால அளவில் கல்வியறிவு இல்லாத பெண்களின் கருவுறுதல் விகிதம் 2.9 ஆக இருந்தது. ஆகவே பெண்களின் கல்வியறிவு கருவுறுதல் விகிதம் குறைவுக்கு முக்கிய காரணமாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.