செய்தியாளர் - தினேஷ்
ஆந்திர மாநிலம் திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் பல்வேறு வகையான வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த வனவிலங்கு பூங்காவிற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். திருப்பதி மலைக்கு வந்துவிட்டு இங்கு வருபவர்கள் மட்டுமல்லாது, தனிப்பட்ட முறையில் பூங்காவிற்கு வருபவர்களும் இருக்கின்றனர். அப்படி நேற்று மாலை பூங்காவிற்கு வந்த இளைஞர் ஒருவர், சிங்கங்களை பராமரிக்கும் பகுதிக்குள் திடீரென்று ஏறி குதித்துள்ளார்.
அப்போது அங்கு உலாவிக்கொண்டிருந்த சிங்கம், அந்த இளைஞரை கொடூரமாக கடித்துக்குதறியது. இதற்கிடையே அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் சத்தம் போட்டு சிங்கத்தை விரட்ட முயன்றனர். ஆனால், சற்று நேரத்தில் அந்த சிங்கம் இளைஞரை கொன்றுவிட்டது.
தகவல் அறிந்து அங்கு சென்ற உயிரியல் பூங்கா அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், சிங்கத்தை அங்கிருந்து கூண்டுக்குள் விரட்டிவிட்டு, உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டனர். நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்த இளைஞரின் பெயர் பிரகலாத குப்தா என்பதும், அவர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, அவர் தனியாக வந்தாரா அல்லது அவருடன் வேறு யாராவது வந்திருக்கிறார்களா? எதற்காக அவர் சிங்கங்கள் வசிக்கும் பகுதிக்குள் இறங்கினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.