இந்தியா

ஆதார் கட்டாயத்திற்கு எதிர்ப்பு: மே.வங்க அரசு உச்சநீதிமன்றத்தில் மனு

ஆதார் கட்டாயத்திற்கு எதிர்ப்பு: மே.வங்க அரசு உச்சநீதிமன்றத்தில் மனு

Rasus

சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து மேற்கு வங்க அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

ரேஷன் கார்டு, வங்கி கணக்கு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசு கூறியிருந்தது. இதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31-ம் தேதி வரை அறிவித்திருந்தது. ஆனால், ஆதார் எண்ணை இணைக்காததால் அரசின் நலத்திட்டங்கள் மறுக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டது. எனவே ஆதார் எண் இணைப்பு குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனையடுத்து ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

இதனிடையே, சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கு தொடக்கத்தில் இருந்தே மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். குறிப்பாக தொலைபேசி எண்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கடுமையாக எதிர்த்த அவர், எனது தொலைபேசி எண் செயலிழந்தால் கூட பரவாயில்லை. ஆனால் ஆதாரை இணைக்கமாட்டேன் என கூறினார். இந்நிலையில் ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேற்குவங்க அரசு மனு தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே ஆதாரவை இணைப்பதற்கு எதிராக பல தனிநபர்கள் தொடர்ந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது மேற்கு வங்க அரசும் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.