இந்தியா

உச்சநீதிமன்றத்தின் கிளைகளை அமைக்கவேண்டும் - குடியரசு துணைத் தலைவர்

உச்சநீதிமன்றத்தின் கிளைகளை அமைக்கவேண்டும் - குடியரசு துணைத் தலைவர்

webteam

உச்சநீதிமன்றத்தின் பிராந்திய கிளைகள் அமைக்கவேண்டும் என்று  குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். 

டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியிட்டு விழாவில்  குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு பங்கேற்றார். இந்த விழாவில் அவர் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளது குறித்து உரையாற்றினார். அதில், “நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் தற்போது மூன்று கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் சில வழக்குகள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது. 

ஆகவே வழக்குகளை விரைந்து முடிக்க நீதித் துறையில் சில மாற்றங்கள் வரவேண்டும். உச்சநீதிமன்றத்தின் பிராந்திய அமர்வுகளை கொல்கத்தா, சென்னை அல்லது ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கவேண்டும். இதனை அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 130-ன்படி அமைக்கலாம். இந்த பரிந்துரையை ஏற்கெனவே சட்ட ஆணையம் தனது 229ஆவது அறிக்கையில் கூறியிருந்தது. 

அதேபோல வழக்குகளை ஒத்திவைப்பதற்கு ஒரு அளவை நிர்ணயிக்கவேண்டும். இதனால் வழக்குகள் தேவையில்லாமல் ஒத்திவைப்பதை தவிர்க்க முடியும். மேலும் வழக்குகளை விசாரித்து முடிப்பதற்கு கால அவகாசத்தை நிர்ணயிக்கவேண்டும். அப்போது தான் நிலுவையிலுள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறையும்” எனத் தெரிவித்துள்ளார்.