அயோத்தி ராமர் கோவில் முகநூல்
இந்தியா

அயோத்தி ராமர் கோவிலில் ரூ.50 லட்சம் மதிப்பிலான 3,000-க்கும் மேற்பட்ட விளக்குகள் காணவில்லை என புகார்!

அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் பாதைகளில் நிறுவப்பட்டிருந்த 50 லட்சம் மதிப்பிலான 3,800 மூங்கில் விளக்குகள் மற்றும் 36 கோபோ விளக்குகள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பால ராமர் கோவில் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. பிரம்மாண்ட துவக்கத்துடன் நடைப்பெற்ற இந்த பிராணப்பிரதிஷ்டை விழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து ராம பக்தர்கள், அரசியல் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து, அன்றாடம் பல ராம பக்தர்கள் ராமர் கோவிலில் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்தான், பக்தர்கள் செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள 3800 மூங்கில் விளக்குகள் மற்றும் 36 கோபோ விளக்குகள் காணவில்லை என தற்போது புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக, அயோத்தி மேம்பாட்டு ஆணையம் வழங்கிய ஒப்பந்தத்தின் கீழ் விளக்குகளை அமைத்த யாஷ் எண்டர்பிரைசஸ் மற்றும் கிருஷ்ணா ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர், ‘விளக்குகள் காணவில்லை’ என ஆகஸ்ட் 9 ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால், காவல்துறையினர் எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்த புகாரில், “ராம் பாதை மற்றும் பக்தி பாதையில் முறையே 6,400 மூங்கில் விளக்குகள் மற்றும் 96 கோபோ புரொஜெக்டர் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மார்ச் 19ம் தேதி வரை அனைத்து விளக்குகளும் இருந்த நிலையில், மே 9ம் தேதி ஆய்வு செய்ததில் சில விளக்குகள் காணாமல் போனது தெரியவந்தது. சுமார் 3,800 மூங்கில் விளக்குகள் மற்றும் 36 கோபோ புரொஜெக்டர் விளக்குகள் சில அடையாளம் தெரியாத திருடர்களால் திருடப்பட்டுள்ளன.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதலாக மே மாதமே விளக்குகள் திருடுப்போனது தெரிய வந்தநிலையில், ஆகஸ்ட் மாதம்தான் இது குறித்து புகார் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், திருடப்பட்ட விளக்குகள் தொடர்பாக தீவிர விசாரணை நடைப்பெற்று வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.