இந்தியா

'தலைமுறையை தாண்டி தொடரும் நம்பிக்கை'-எல்.ஐ.சியின் 64-ஆவது பிறந்த நாள் இன்று !

'தலைமுறையை தாண்டி தொடரும் நம்பிக்கை'-எல்.ஐ.சியின் 64-ஆவது பிறந்த நாள் இன்று !

jagadeesh

நாட்டின் கடைகோடி கிராமத்தில் உள்ள கடைசி மனிதனையும் சென்றடைந்திருக்கும் எல்.ஐ.சி நிறுவனத்தின் 65-ஆவது பிறந்த நாள் இன்று. இத்தனை ஆண்டுகள் ஆனாலும் கூட அண்ணா சாலையில் உள்ள கட்டடத்தை போன்று மக்கள் மனதில் கம்பீரமாக நிற்கிறது எல்.ஐ.சி.

எல்.ஐ.சி நிறுவனம் வருவதற்கு முன்னால் பல கசப்பான நிகழ்வுகள் நம் நாட்டில் ‌நடந்தேறின. இந்தியாவில் முதலில் அந்நிய நிறுவனங்கள் தான் காப்பீடு என்பதை அறிமுகப்படுத்தின. 1818 முதல் 1870 வரை பல்வேறு அந்நிய நிறுவனங்கள் இருந்தாலும் கூட இந்திய மக்களை அவர்கள் சக உயிர்களாக மதிக்கவில்லை. காப்பீடு செய்ய மறுத்தார்கள். அப்படியே தந்தாலும் அதிக பிரீமியத்தை வசூலித்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்திய தனியார் நிறுவனங்கள் களத்திற்கு வந்தன. அப்போதும் மக்களிடம் அதிக பணம் வசூலிக்கப்பட்டது. 1944 முதல் 1954க்குள் 25 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் திவாலாயின. 100 நிறுவனங்கள் சரியான கணக்கைகூட சமர்ப்பிக்கவில்லை. இந்த நிலையில் தான் 1956ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி எல்.ஐ.சி உருவாக்கப்பட்டது.

அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, நிதியமைச்சர் சிந்தாமணி தேஷ்முக் ஆகியோர் எல்.ஐ.சியின் இலக்குகளை அறிவித்தனர். அவற்றில் முக்கியமான மூன்று இலக்குகள், காப்பீடு வசதியை மூலை முடுக்குக்கெல்லாம் எடுத்துச் செல்வது, நுகர்வோருக்கான வாக்குறுதியை தவறாமல் நிறைவேற்றுவது, மக்கள் சேமிப்பு மக்கள் நலனுக்கே என தேசப் பணிகளுக்கு பயன்படுத்துவது. 64 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட எல்.ஐ.சி தன் பணியை தவறாமல் செய்து வருகிறது.

இதனிடையே 1999இல் தனியார் நிறுவனங்கள் இன்சூரன்ஸ் துறையில் அனுமதிக்கப்பட்டன. களத்தில் 24 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. ஆனாலும் எல்.ஐ.சியின் செயல்பாடுகள் எந்த வகையிலும் தனியார் நிறுவனங்களுக்கு சளைத்தது அல்ல. எல்.ஐ.சி 42 கோடி பாலிசிகளைக் கொண்டுள்ள உலகத்தின் தனிப் பெரும் நிறுவனமாக உள்ளது. கடைசி மனிதனையும் தொடும் வகையில் உள்ள எல்.ஐ.சியின் உரிமப் பட்டுவாடா விகிதம் 98 சதவீதம்.

1956இல் அரசின் 5 கோடி ரூபாய் முதலீட்டோடு துவங்கப்பட்ட எல்.ஐ.சிக்கு அதன் பிறகு கூடுதல் முதலீடே தேவைப்படவில்லை. இன்று எல்.ஐ.சியின் சொத்து மதிப்பு 32 லட்சம் கோடி ரூபாய். ரயில்வே, நெடுஞ்சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற துறைகளுக்கு பல்லாயிரம் கோடி ரூபாயை எல்.ஐ.சி நிதியாதாரமாக வழங்கி வருகிறது.

எப்போதெல்லாம் அரசு நிதி நெருக்கடியை சந்திக்கிறதோ அப்போதெல்லாம் எல்ஐசி காப்பாற்றும். இப்படி தன்னிகரில்லா நிறுவனமாக திகழும் எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. ‌அரசின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்காமல் எல்ஐசி நிறுவனத்தை போல், நம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.