கல்வியின் பாதையில் ஹிஜாப் பிரச்னையை ஏன் கொண்டு வருகிறீர்கள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ளது குண்டாப்பூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இந்தக் கல்லூரியில் கடந்த சில வாரங்களாகவே முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதிக்கக் கூடாது என மற்றொரு தரப்பைச் சேர்ந்த சில மாணவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த விவகாரம் மத ரீதியான பிரச்சினையாக உருவெடுத்ததை அடுத்து, முஸ்லிம் மாணவிகள் இனி ஹிஜாப் அணிந்து வர வேண்டாம் என கல்லூரி நிர்வாகம் சில தினங்களுக்கு முன்பு அறிவுறுத்தியது.
இருந்தபோதிலும், 25-க்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவிகள் நேற்று ஹிஜாப் அணிந்து வந்ததால் அவர்களை உள்ளே அனுமதிக்க கல்லூரி நிர்வாகம் மறுத்துவிட்டது. இதையடுத்து, அந்த மாணவிகள் கல்லூரி நுழைவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக மாணவிகள் தரப்பில் கர்நாடகா உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த பிரச்னை தற்போது நாடு முழுவதும் பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "கல்வியின் பாதையில் ஹிஜாப்க்கு இடையூறு கொண்டு வருவதன் மூலமாக, நம் நாட்டு மகள்களின் எதிர்காலத்தை திருடிக் கொண்டிருக்கிறோம். கல்வியின் கடவுளான சரஸ்வதி, அனைவருக்கும் பொதுவாகவே அறிவை தந்துள்ளார். அதில் அவர் எந்த பேதமும் பார்க்கவில்லை" எனக் கூறியுள்ளார்.
ராகுல் காந்திக்கு பாஜக பதிலடி:
இதனிடையே, ராகுல் காந்தியின் இந்த ட்வீட்டுக்கு கர்நாடகா பாஜக காட்டமாக பதிலளித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், "கல்வியில் பிரிவினைவாதத்தை புகுத்தும் வேலையை ராகுல் காந்தி செய்து வருகிறார். இதன் மூலம் இந்தியாவின் எதிர்காலத்துக்கு தான் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதை அவர் மீண்டும் நிரூபித்திருக்கிறார். கல்வி கற்க பர்தா அவசியம் என்றால், காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் பர்தா கட்டாயம் என ஏன் ராகுல் காந்தி அறிவிக்கவில்லை?" என கர்நாடகா பாஜக கேள்வியெழுப்பியுள்ளது.