சைக்கிள் ஓட்டி சென்றுக் கொண்டிருந்த நபரை சிறுத்தை ஒன்று தாக்க முயன்ற சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி பிரவீன் கேசவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனை சுமார் 1.43 லட்சத்துக்கும் மேலானோர் பார்த்துள்ளனர்.
அசாம் மாநிலத்தின் காசிரங்கா வனப்பகுதியில்தான் இந்த சம்பவம் கடந்த ஜனவரி மாதம் நடந்திருப்பதாகவும் பிரவீன் குறிப்பிட்டுள்ளார். காசிரங்காவில் உள்ள ஹல்திபரி விலங்குகள் நடைபாதையில் சாலையோரமாக இளைஞர் ஒருவர் சைக்கிள் ஓட்டிச் சென்ற போது வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை சாலையை கடக்க முற்பட்டிருக்கிறது.
அப்போது சைக்கிளில் வந்த நபர் மீது சிறுத்தை முட்டியதில் அந்த நபர் சற்று நிலைத்தடுமாற இதனையடுத்து வரிசையாக வாகனங்கள் வந்ததால் அந்த சிறுத்தை வந்த பாதையிலேயே வனத்திற்குள் சென்றிருக்கிறது.
இதனையடுத்து கதி கலங்கிப்போன அந்த சைக்கிளில் வந்த நபர் மீண்டும் வந்த பாதையிலேயே திரும்பிச் சென்றிருக்கிறார். நல்வாய்ப்பாக சிறுத்தையால் தாக்கப்பட்ட அந்த நபருக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை.
இதனிடையே காசிரங்காவிலிருந்து கர்பி அங்லாங் வரையிலான பகுதிகளில் வனவிலங்குகள் அடிக்கடி உலவும் இடமாக இந்த நடைபாதை உள்ளதால் எந்த நேரத்திலும் பாதசாரிகள், பயணிகள் விலங்குகளை சந்திக்கும் அபாயம் ஏற்படும். ஆகவே வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என காசிரங்கா தேசிய பூங்காவின் DFO ரமேஷ் குமார் கோகோய் தெரிவித்திருந்தார்.
மேலும், NH-3ல் வாகனங்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடாது என்றும், அவ்வாறு சென்ற வாகனங்கள் சென்சார் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: