கேரள உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், இது "வதந்திகளைப் பொய்யாக்கிய வெற்றி" என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் தலைமையிலான ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இரண்டாம் இடத்திலுள்ள காங்கிரஸ் கூட்டணி ஓரளவு கவனிக்கத்தக்க வெற்றியையே பெற்றிருக்கிறது. பாஜக கூட்டணி பெரிதாக ஈர்க்கவில்லை.
இந்த வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், "மக்கள் அளித்துள்ள வெற்றியின் மூலம் வதந்திகள் அனைத்தும் பொய்யாக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், பாஜகவின் கூற்றுகள் பொய்யாகியிருக்கின்றன. இது இடதுசாரிகளுக்கு வண்ணமயமான வெற்றி" என்றார்.
கேரளாவில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 244 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முன்னிலை மற்றும் வெற்றி நிலவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இரவு 8 மணி வெற்றி / முன்னிலை நிலவரம்:
> 6 மாநகராட்சிகளில் ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி 5 இடங்கள்; காங்கிரஸ் கூட்டணி 1 இடம்.
> 86 நகராட்சிகளில் இடதுசாரி கூட்டணி 35 இடங்கள், காங்கிரஸ் கூட்டணி 45 இடங்கள்; பாஜக கூட்டணி 2 இடங்கள்.
> 14 மாவட்ட ஊராட்சிகளில் இடதுசாரி கூட்டணி 10 இடங்கள், காங்கிரஸ் 4 இடங்கள்.
> 152 ஊராட்சி ஒன்றியங்களில் இடதுசாரி கூட்டணி 108 இடங்கள்; காங்கிரஸ் கூட்டணி 44 இடங்கள்.
> 941 ஊராட்சிகளில் இடதுசாரி கூட்டணி 514 இடங்கள்; காங்கிரஸ் கூட்டணி 377 இடங்கள்; பாஜக 22 இடங்கள்.
கேரளாவில் 941 கிராம ஊராட்சி, 152 ஊராட்சி ஒன்றியம், 14 மாவட்ட ஊராட்சி, 86 நகராட்சி, 6 மாநகராட்சி ஆகிய 1,199 உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 31ஆம் தேதியோடு முடிவடைகிறது. தொடர்ந்து அந்த பதவிகளுக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க டிசம்பர் 8, 10, 14. ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. மாநிலத்தில் மொத்தம் 2.71 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். சராசரியாக 77 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.