rahul gandhi pt web
இந்தியா

விமர்சனங்கள் To எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு.. ராகுல்காந்திக்கு முன் இருக்கும் சவால்கள் என்ன?

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தியின் எதிர்க்கட்சித்தலைவர் பொறுப்பை சபாநாயகர் ஓம் பிர்லா அங்கீகரித்துள்ளார். ராகுல்காந்தி எதிர்க்கட்சித்தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், அவர் முன் புதிய பொறுப்புகளும், சவால்களும் காத்திருக்கின்றன.

PT WEB

ராகுல்காந்தி

ஒரு வெள்ளை டி. ஷர்ட், கறுப்பு பேண்ட்... இதுதான் ராகுல்காந்தியின் அடையாளமாக இருந்தது. பாரத்ஜோடோ யாத்திரையாகட்டும், பாரத் நியாய் யாத்திரையாகட்டும், அத்தனைக்கும் ஒரே தோற்றம்தான். பப்பு என்று முன்னர் எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த ராகுல்காந்தியின் பிம்பத்தை இந்த யாத்திரைகள் மாற்றி, போர்க்குணம் கொண்டவராக அடையாளப்படுத்தியிருக்கிறது என்றால் மிகையல்ல.. எம்.பியாக பதவியேற்கும்வரை இருந்த ராகுல்காந்தியின் தோற்றம் இப்போது மாறியிருக்கிறது. பொறுப்புகளும் மாறியிருக்கின்றன.

rahul gandhi

எதிர்க்கட்சி என்ற அங்கீகாரத்தை நீண்ட இடைவெளிக்குப்பிறகு பெற்றிருக்கிற காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினராக மட்டுமல்லாமல், எதிர்க்கட்சித்தலைவர் என்ற பொறுப்பையும் இப்போது ஏற்றிருக்கிறார் ராகுல்காந்தி.. எதிர்க்கட்சித்தலைவர் பதவி என்பது கேபினட் அந்தஸ்து கொண்ட பொறுப்பு. மத்திய அமைச்சருக்கு அளிக்கப்படுவதைப் போன்ற அனைத்து வசதிகளும், எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்படுகிறது. அதேசமயத்தில் பொறுப்புகளும் அதிகம்.

எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்புகள்

CBI இயக்குநர் போன்ற முக்கிய பொறுப்புகளுக்கான அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும் குழுவில் எதிர்க்கட்சித்தலைவர் கட்டாயம் இடம் பெற வேண்டும். தேர்தல் ஆணையர்கள், மத்திய அரசின் தலைமை விஜிலென்ஸ் ஆணையர் (CVC), தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் போன்ற முக்கிய பொறுப்புகளுக்கான அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும் குழுவிலும் எதிர்க்கட்சித் தலைவர் இடம்பெறுகிறார்.

rahul gandhi

நாடாளுமன்றத்தில் பொதுக் கணக்கு குழு, அரசு நிறுவனங்களுக்கான குழு போன்ற முக்கிய நாடாளுமன்ற குழுக்களில் எதிர்க்கட்சித் தலைவரின் பங்கு இன்றியமையாதது. தவிர நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் மற்றும் தீர்மானங்கள் மீதான விவாதங்களில் எதிர்க்கட்சிகள் சார்பாக பேசுவதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவருக்கு முதல் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆகவே ராகுல் காந்தி ஒவ்வொரு மசோதா மீதான விவாதத்திலும் கலந்து கொண்டு எதிர்க்கட்சிகளின் முதல் பேச்சாளராக வலியுறுத்த வேண்டிய பொறுப்பும் அவருக்கு இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் புதிய குழுக்கள் அமைப்பது மற்றும் அலுவல் பட்டியலை இறுதி செய்வது போன்ற நடவடிக்கைகளிலும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருக்கு முக்கிய பொறுப்பு உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் போது பயணங்களை தவிர்த்து, மக்களவை அலுவல்களில் முழு நேரமும் கலந்து கொள்வது எதிர்க்கட்சித் தலைவரின் முக்கிய பொறுப்புகளில் ஒன்று.

பரபரப்புகளுக்கு பஞ்சமில்லா 18ஆவது மக்களவை

ராகுல் காந்தி நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்போது அலுவல்களில் கலந்து கொள்ளாமல் வெளிநாடுகளில் பயணம் செய்கிறார் என்பது பாஜக உள்ளிட்ட கட்சிகளின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள நிலையில் இதுபோன்ற பயணங்களை நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் தவிர்ப்பது அவசியமாகிறது.

rahul gandhi

மக்களவையில் பேச வேண்டிய விவாதங்களில் பங்கேற்றுவிட்டு உடனே அவையை விட்டு வெளியேறுவது இனி சாத்தியமாகாது. ஆகவே ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் கூடுதல் நேரம் செலவிட வேண்டி இருக்கும். பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் அதிக நேரம் செலவிடுவது இல்லை, கேள்விகளுக்கு பதில் அளிப்பது இல்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. இதனால் இந்த 18 ஆவது மக்களவையில் பரபரப்புகளுக்கும், விறுவிறுப்புகளும் பஞ்சமிருக்காது.