இந்தியா

அத்தனை பேரும் புதுமுகம்... ஷைலஜா டீச்சருக்கு வாய்ப்பு மறுப்பு: கேரள அமைச்சரவையில் ட்விஸ்ட்

அத்தனை பேரும் புதுமுகம்... ஷைலஜா டீச்சருக்கு வாய்ப்பு மறுப்பு: கேரள அமைச்சரவையில் ட்விஸ்ட்

sharpana

நாளை மறுநாள் பதவியேற்க இருக்கும் கேரள புதிய அமைச்சரவையில் ஆளும் எல்டிஎப் கூட்டணியின் முக்கிய தலைவராக கருதப்படும் ஷைலஜா டீச்சருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

அண்மையில் கேரள மாநில சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் சி.பி.எம் கட்சி தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து இரண்டாம் முறையாக தொடர்ந்து ஆட்சிக் கட்டிலை தக்கவைத்துக்கொண்டது. மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 தொகுதிகளில் எல்.டி.எஃப் கூட்டணியும், மீதமுள்ள 41 தொகுதிகளை காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணியும் கைப்பற்றின. கடந்த முறை நேமம் தொகுதியில் வென்ற பா.ஜ.க இந்த முறை அந்த தொகுதியை இழந்தது. கடந்த மே 2-ம் தேதியே வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியானாலும் திருவனந்தபுரத்தில் ஆளும் எல்.டி.எஃப் கூட்டணி கட்சிகளின் முதல் கூட்டம் நேற்று நடந்தது.

இந்தக் கூட்டத்துக்கு பின் ``மீண்டும் முதல்வர் பினராயி விஜயன் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்வார். வரும் 20ம் தேதி இதற்கான பதவியேற்பு விழா நடைபெறும். இந்த முறை 21 அமைச்சர்களுடன் பினராயி விஜயன் பதவியேற்றுக்கொள்வார். சி.பி.எம்-க்கு 12, சி.பி.ஐ-க்கு 4, ஜனதாதள் எஸ், கேரள காங்கிரஸ் எம், என்.சி.பி ஆகிய கட்சிககுக்கு தலா ஒரு இடம் என அமைச்சர் பதவி பிரித்து வழங்கப்படும். மீதம் உள்ள இரண்டு அமைச்சர் பதவிகள் நான்கு கட்சிகளுக்கு தலா இரண்டரை ஆண்டுகள் வீதம் ஒதுக்கப்படும். அமைச்சர்களுக்கான துறை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதனை முதல்வர் பினராயி விஜயன் இறுதி செய்வார். சபாநாயகர் பதவி சி.பி.எம்-க்கும், துணை சபாநாயகர் பதவி சி.பி.ஐ-க்கும் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், இந்த முறை அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. இதனால் கடந்த ஆட்சியில் இருந்து முக்கிய அமைச்சர்களைத் தவிர பல புதுமுகங்கள் இடம்பெறுவார்கள் என நினைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கடந்த ஆட்சியில் இடம்பெற்றிருந்த எந்த அமைச்சர்களும் இந்த முறை அமைச்சரவையில் இடம்பெறபோவதில்லை என்று எல்.டி.எஃப் கூட்டணி அறிவித்துள்ளது. குறிப்பாக இதில் எதிர்பாராத விதமாக, முன்னாள் சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா புதிய கேரள அமைச்சரவையில் பங்கேற்க மாட்டார் என்று எல்.டி.எஃப் அறிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பினராயி விஜயன் அரசில் அவருக்கு அடுத்தப்படியாக மக்கள் மத்தியில் தெரிந்த ஒரு முகம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு ஷைலஜா டீச்சர் பெயரை சொல்லலாம். தனது துடிப்பு மிக்க நடவடிக்கைகளால் மக்கள் மனதில் குறைந்த காலத்தில் நீங்கா இடம்பிடித்தவர் ஷைலஜா டீச்சர். கடந்த சில ஆண்டுகளாக கேரளம் எதிர்கொண்ட பெரும் துயர்களான, மழை பெருவெள்ளம், நிபா வைரஸ், கொரோனா வைரஸ், ஒக்கி புயல், நிலச்சரிவு போன்றவற்றில் இருந்து மக்களை காத்ததில் இந்த ஷைலஜா டீச்சருக்கு பெரும் பங்கு உண்டு. குறிப்பாக, கொரோனா நோய்த்தொற்றின் முதல் அலையை கேரள மாநில அரசு எதிர்கொண்ட விதம் பாராட்டுகளை பெற்றது.

இதற்கு பின்னணியில் இருந்தவர் ஷைலஜா டீச்சர் மட்டுமே. எவ்வளவு இக்கட்டான சூழலாக இருந்தாலும் துணிந்து போராடும் மனம் கொண்ட சைலஜா டீச்சர் கடந்த பினராயி அரசில் சுகாதாரத்துறை மற்றும் சமூகநலத்துறை என இரண்டு மிகமுக்கியமான துறைகளை திறம்பட கையாண்டு வந்தார். இதனால் இந்த முறையும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் முதல்வர் பினராயி விஜயனைத் தவிர அனைவரும் புதிய நபர்களை நியமிக்க வேண்டும் என்று கட்சி தீர்மானத்தின் அடிப்படையில் தற்போது அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அமைச்சர் பதவிக்கு மாறாக கட்சி கொறடாவாக ஷைலாஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, இரண்டாவது பினராயி விஜயன் அரசாங்கத்தில் அமைச்சர்களாக சிபிஎம் கட்சி சார்பில் எம்.வி.கோவிந்தன், கே.ராதாகிருஷ்ணன், சஜி செரியன், கே.என்.பலகோபால், பி ராஜீவ், வி.என்.வாசவன், வி சிவன்குட்டி, முகமது ரியாஸ், டாக்டர் ஆர் பிந்து, வீணா ஜார்ஜ் மற்றும் அப்துல் ரஹ்மான் ஆகியோர் பதவியேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முகமது ரியாஸ் பினராயி விஜயனின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.