கேரளா மாணவிகள் ட்விட்டர்
இந்தியா

ஒரேயொரு மாணவிக்கு கூடுதல் மதிப்பெண் போட்ட ஆசிரியர்.. போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவிகள்!

கேரளாவில் மாணவி ஒருவருக்கு ஆசிரியர் கூடுதலாக மதிப்பெண் அளித்த விவகாரத்தில் பிற மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர்.

Prakash J

அண்டை மாநிலமான கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் தொடுபுழா என்ற நகரில் சட்டக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எல்.எல்.பி. படிக்கும் மாணவி ஒருவருக்கு செமஸ்டர் தேர்வில் ஆசிரியர் ஒருவரால் சட்டவிரோதமாகக் கூடுதலாக மதிப்பெண் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த அக்கல்லூரி மாணவிகளில் 7 பேர், கல்லூரி முதல்வரிடம் சென்று முறையிட்டுள்ளனர். அதற்கு, கல்லூரி நிர்வாகம் அந்த 7 மாணவிகளையும் கல்லூரியில் இருந்து தற்காலி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் அந்தக் கல்லூரியின் பிற மாணவிகள் நேற்று கல்லூரிக் கட்டடத்தின் மேல்தளத்திற்குச் சென்று குதித்துவிடுவதாக மிரட்டல் விடுத்தனர்.

தகவல் அறிந்து அங்கே வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடமும், கல்லூரி முதல்வரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவிகளை கல்லூரியைவிட்டு சஸ்பெண்ட் செய்த உத்தரவை ரத்து செய்வதாக கல்லூரி முதல்வர் கூறினார். போராட்டம் நடத்திய மாணவிகள் அதற்கு சம்மதிக்கவில்லை, கல்லூரி முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அப்போதுதான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினர்.

இதனையடுத்து தொடுபுழா சப் கலெக்டர் அருண் எஸ்.நாயர், இடுக்கி எம்.பி.டீன்குரியா கோஸ், ஆகியோர் கல்லூரிக்கு வந்து மாணவிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன்பிறகே மாணவிகள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.