உண்மை அறியும் சோதனைக்கு தயார் என மறைந்த கலாபவன் மணியின் நண்பர்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு எனப் பல்வேறு மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் கலாபவன் மணி. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி காலக்குடி ஆற்றங்கரையில் உள்ள தனது பண்ணை வீட்டில் நண்பர்களுடன் மது விருந்தில் பங்கேற்றார். அப்போது கலாபவன் மணிக்கு திடீரென உடல்நலம் குன்றியது. உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் 2 நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி கலாபவன் மணி உயிரிழந்தார். இதையடுத்து அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதனால் கலாபவன் மணியின் உடலை கொச்சியில் உள்ள ஆய்வகத்தில் சோதனை செய்தபோது, அவரது உடலில் பூச்சிக் கொல்லி மருந்து, கலந்திருப்பது தெரிய வந்தது.
ஆனால் போலீஸ் தரப்பில் கல்லீரல் பாதிக்கப்பட்டதே கலாபவன் மணியின் மரணத்துக்கு காரணம் எனக் கூறியது. இதனால் கலாபவன் மணியின் மரணத்தில் மர்மம் நீடித்தது. இதையடுத்து கலாபவன் மணி உறவினர்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மனுத்தாக்கல் செய்தனர். இறுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கலாபவன் மணியின் நண்பர்களான ஜாபர் இடுக்கி, சபுமான் உள்ளிட்ட 7 பேரும் உண்மை அறியும் சோதனைக்கு தயார் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். உண்மை அறியும் சோதனை குற்றம் சாட்டப்பட்டவர்களின் சம்மதத்துடனேயேதான் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.