இந்தியா

பாடகி லதா மங்கேஷ்கரின் சிகிச்சைக்காக முழு வருமானத்தையும் கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்

பாடகி லதா மங்கேஷ்கரின் சிகிச்சைக்காக முழு வருமானத்தையும் கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்

Veeramani

மும்பையில் உள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் சிகிச்சைக்காக தனது சம்பாத்தியம் முழுவதையும் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரத ரத்னா விருது பெற்ற 92 வயதான பாடகியான லதா மங்கேஷ்கர் கடந்த 10 நாட்களாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது ஐசியு பிரிவில் கோவிட் மற்றும் நிமோனியாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

தனது மெல்லிசைக் குரலால் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளார் இவர், இந்த சூழலில் மும்பையைச் சேர்ந்த சத்யவான் கீதே என்ற ஆட்டோ ஓட்டுநர் தனது முழு சம்பாத்தியத்தை லதா மங்கேஷ்கரின் சிகிச்சைக்காக அர்ப்பணித்துள்ளார்.

ஆட்டோ ஓட்டுனரான இவர், தனது வாகனம் முழுவதும் லதா மங்கேஷ்கரின் புகழ்பெற்ற பாடல் வரிகளை எழுதியுள்ளார். மேலும் அவரின் மிகப்பெரிய படத்தையும் பதித்து, 'சீக்கிரம் குணமடையுங்கள்' என்ற வாசகத்தையும் எழுதியிருக்கிறார். ஆட்டோ ஓட்டுநர் சத்யவான் கீதே, லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியைக் கேட்ட நாள் முதல் தொடர்ந்து அவருக்காக பிரார்த்தனை செய்து வருகிறார்.

பாடகியின் உடல்நிலை குறித்து பேசிய சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோபே, "லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்து ப்ரீச் கேண்டி மருத்துவமனை அதிகாரிகளிடம் பேசினேன். பாடகியின் உடல்நிலை குறித்த அறிவிப்புகளை உடனுக்குடன் வழங்க வேண்டும், ஏனெனில் மக்கள் அவரது உடல்நிலை பற்றி அறிய ஆர்வமாக உள்ளனர்" என தெரிவித்தார்

இந்திய சினிமாவின் சிறந்த பாடகிகளில் ஒருவராகக் கருதப்படும் லதா மங்கேஷ்கர், 1942 ஆம் ஆண்டு தனது 13வது வயதில் முதன்முதலாக பாடத் தொடங்கினார், அவர் இதுவரை பல இந்திய மொழிகளில் 30,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். பத்ம விபூஷண், பத்ம பூஷன், தாதாசாகேப் பால்கெ, சிறந்த பாடகிக்காக மூன்று தேசிய விருதுகள், 15 பெங்கால் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க விருதுகள், 7 பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.