மக்களவை தேர்தல் puthiya thalaimurai
இந்தியா

மக்களவை தேர்தல் | இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

மக்களவைத் தேர்தலில் 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

PT WEB

கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றத் தேர்தல், 40 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்றத்திற்கான இறுதிக் கட்டத் தேர்தல் இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியுள்ளது. இதில் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான சண்டிகரிலும் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் இறுதிகட்டமாக 42 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் இதில் 5.42 கோடி ஆண்கள், 4.82 கோடி பெண்கள் மற்றும் 3574 மாற்றுப் பாலின வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இத்தேர்தலில் பிரதமர் மோடி, நடிகை கங்கனா ரனாவத், அனுராக் தாக்கூர் உள்பட மொத்தம் 904 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதில் களம் காணும் முக்கிய வேட்பாளர்கள் யார்?

குறிப்பாக, உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். ஏற்கனவே கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் அத்தொகுதியில் வென்றிருந்த அவர், 3ஆவது முறையாக அங்கு களம் காண்கிறார். பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி அஜய் ராயை நிறுத்தியுள்ளது.

பிரதமர் மோடி தியானம்

இமாச்சல பிரதேசத்தின் ஹமிர்பூர் தொகுதியில், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூரும், காங்கிரஸ் சார்பில் சத்பால் சிங் ரைசாடாவும் மோதுகின்றனர். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் முதன்முதலாக ஹமிர்பூரில் வெற்றி பெற்ற அனுராக் தாகூர், தொடர்ந்து நடைபெற்ற 3 நாடாளுமன்றத் தேர்தல்களிலுமே வெற்றிக்கொடியை நாட்டியுள்ளார்.

அதே மாநிலத்தின் மண்டி தொகுதியில், பாஜக சார்பில் நடிகை கங்கனா ரணாவத் களமிறங்கியுள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகனான விக்கிரமாதித்ய சிங் போட்டியிடுகிறார். மண்டி தொகுதி, வீரபத்ர சிங் குடும்பத்தின் கோட்டையாகக் கருதப்படுகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், மண்டி தொகுதியை பாஜக கைப்பற்றியது. இருந்தபோதிலும், பாஜக எம்.பி மறைந்ததால் நடைபெற்ற இடைத்தேர்தலில், வீரபத்ர சிங்கின் மனைவியும், விக்கிரமாதித்ய சிங்கின் தாயாருமான பிரதிபா தேவி சிங் மண்டி தொகுதியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்கத்தின் டைமண்ட் ஹார்பர் தொகுதியில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில், மம்தா பானர்ஜியின் மருமகனான அபிஷேக் பானர்ஜி களம் கண்டுள்ளார். திரிணாமூல் காங்கிரஸின் கோட்டையாக திகழும் அத்தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பிரத்குர் ரஹ்மானும், பாஜக சார்பில் அபிஜித் தாஸூம் போட்டியிடுகின்றனர்.