ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் சேர்க்கப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பை ஜெகன் மோகனின் அரசு கலந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார். தவிர, அதற்கான ஆதாரங்களும் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இவ்விவகாரம் ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.
தவிர, பக்தர்களிடமும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம், இந்த விவகாரத்தினால் கோயிலின் புனிதத்தன்மையை கெடப்பட்டதாகக் கருதி, திருப்பதி கோயிலில் யாக சாந்தி முதலான பல யாகங்களும் சாந்திகளும் நடத்தப்பட்டதுடன், கோமியமும் தெளிக்கப்பட்டு குங்கிலியப் புகை வீசப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ‘ஏழுமலையானிடம் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்கப்போகிறேன்’ எனக் கூறி கடந்த 22ஆம் தேதி (நேற்று முன்தினம்) முதல் 11 நாட்கள் பரிகார விரதத்தை தொடங்கி உள்ளார் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண். இதனால் லட்டு விவகாரம் நாளுக்குநாள் இந்திய அளவில் பேசுபொருளாகி வருகிறது.
இந்த நிலையில், கடந்த நான்கு நாட்களில் மட்டும் 14 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி மொத்தம் 3.59 லட்சம் லட்டுகளும், செப்டம்பர் 20ஆம் தேதி 3.17 லட்சம் லட்டுகளும், செப்டம்பர் 21ஆம் தேதி 3.67 லட்சம் லட்டுகளும், செப்டம்பர் 22ஆம் தேதி 3.60 லட்சம் லட்டுகளும் விற்பனையாகியுள்ளன. தினசரி சராசரியாக 3.50 லட்சம் லட்டுகள் விற்பனையாகின்றன.