இந்தியா

சபரிமலையில் இலங்கை பெண் கணவருடன் சாமி தரிசனமா ?

சபரிமலையில் இலங்கை பெண் கணவருடன் சாமி தரிசனமா ?

இலங்கையைச் சேர்ந்த 46 வயதான சசிகலா தன் கணவருடன் சென்று நேற்று இரவு 18 படி ஏறி சாமி தரிசனம் செய்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண்ணான சசிகலாக பல நாட்கள் விரதமிருந்து இருமுடி கட்டி தன் கணவருடன் நேற்று பம்பா வந்துள்ளார். சபரிமலையில் பெரும் பிரச்னைகள் இருப்பதால் கேரள போலீஸாரிடம் தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்போடு சன்னிதானம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டனர். ஐயப்பன் கோவிலின் நடை இரவு 11 மணிக்கு சாத்தப்படும், சசிகலாவும் அவரது கணவரும் நேற்று இரவு 10.45 மணிக்கு இருமுடியுடன் பதினெட்டாம்படி ஏறி சாமி தரிசனம் செய்தனர். இதனை கேரள போலீஸார் உறுதி செய்துள்ளனர்.

1972 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி சசிகலா பிறந்ததாக பாஸ்போர்ட் விபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சசிகலா குடும்பத்தினர் அனைவரும் ஐயப்ப பக்தர்கள் அவரின் கணவர் பல ஆண்டுகளாக தொடர்ந்து சபரிமலைக்கு வந்து சென்றுள்ளார். இதனால் சசிகலா தனக்கு வயதாகிவிட்டதால் சீக்கிரம் சபரிமலை சென்று வந்துவிட வேண்டும் என்ற நோக்கில் இந்தாண்டு தரிசனத்துக்காக ஏற்கெனவே ஆன்லைன் தரிசனத்துக்கு முன்பதிவு செய்து. தன்னுடைய வயது மற்றும் மருத்துவ ஆவணங்களையும் சமர்பித்தாக தேவஸம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், சபிரமலையில் நான் சாமி தரிசனம் செய்யவில்லை என்று சசிகலா தெரிவித்துள்ளார். கேரள தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சசிகலா "நான் ஒரு ஐயப்ப பக்தை முறையாக 48 நாட்கள் விரதமிருந்து வந்துள்ளேன். நான் என்னுடைய கர்ப்ப பையை மருத்துவ காரணங்களுக்காக எடுத்துவிட்டேன், அதற்கான மருத்துவச் சான்றும் என்னிடம் இருக்கிறது. ஆனாலும் போலீஸாரால் நான் திருப்பி அனுப்பப்பட்டேன். 18 படிகள் மட்டுமே ஏறினேன் சாமி தரிசனம் செய்ய என்னை அனுமதிக்கவில்லை" என்றார் சசிகலா. ஆனால் போலீஸார் சசிகலா நிச்சயமாக சாமி தரிசனம் செய்திருப்பார் என தெரிவிக்கின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து பெண்கள் சிலர் ஐயப்பனை தரிசனம் செய்ய சபரிமலை செல்ல முயன்றனர். ஆனால் போராட்டக்காரர்கள் மற்றும் பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்களால் சபரிமலையின் சன்னிதானம் வரை செல்ல முடியவில்லை. இதனிடையே 50 வயதிற்குட்பட்ட கனகதுர்கா மற்றும் பிந்து ஆகிய இரண்டு பெண்கள் கேரள போலீசார் உதவியுடன் சபரிமலையில் இரு தரிசனம் செய்தனர். இது கேரளாவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

இரண்டு பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ததை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் சங் பரிவார் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் நடைபெற்றது. பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதில் இரண்டு ஐயப்ப பக்தர்களுக்கு கத்தி குத்தும் நடைபெற்றது. இந்த முழு அடைப்பு வன்முறையில் 100 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக 745 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். முன்னெச்சரிக்கை காரணமாக 628 பேரையும் கேரள போலீஸார் கைது செய்துள்ளனர். 

Source: TOI, The Hindu and The News Minute