கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பெய்த கனமழையால் நேற்று கொக்கையாறு ஊராட்சிக்கு உட்பட்ட பூவஞ்சி கிராம பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று வீடுகளில் வசித்த 23 பேர் மண்ணுக்குள் புதைந்த சோக சம்பவம் நடந்துள்ளது. அவர்களில் 17 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் புதையுண்ட 8 பேரை மீட்கும் பணி நடந்து வருகிறது.
அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மண்ணுக்குள் புதைந்த 8 பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த எட்டு பேரில் ஐந்து பேர் குழந்தைகள் என்று தெரியவந்துள்ளது.
நேற்றைவிட கேரளாவில் மழை குறைந்திருந்தாலும் இடுக்கி கோட்டயம் எர்ணாகுளம் திருச்சூர் பத்தனம்திட்டா ஆகிய 5 மாவட்டங்களில் அதி தீவிர முன்னெச்சரிக்கை தொடர்கிறது. இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.65 அடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய அணையான 2,403 மீ. உயரம் கொண்ட இடுக்கி அணையின் நீர்மட்டம் 2,395 அடியாகி உள்ளது. 2,396 ஆடி ஆனதும் வடக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட உள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு துவங்கி தற்போது வரையிலான நான்கு ஆண்டுகளில் தொடர்ச்சியாக பருவமழை காலங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மக்களை அச்சத்திலும் பீதியிலும் உறைய வைத்துள்ளது.
கனமழையும் பேரிடரையும் எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை படுத்தப்பட்டுள்ளது. தாலுகா அலுவலகங்கள் துவங்கி ஆட்சியர் அலுவலகம் வரை அரசு அலுவலகங்கள் அனைத்தும் 24 மணிநேரமும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ள கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆபத்தில் சிக்கிய மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க கட்டிடங்கள் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.