லாலு, ரோஹினி, மிசா, ரபடி தேவி pt web
இந்தியா

களத்தில் இறங்கிய லாலுவின் 2 மகள்கள்! ஒரே குடும்பத்தில் இத்தனை உறுப்பினர்களா? பீகார் அரசியல் நிலவரம்!

லாலு பிரசாத் யாதவின் இரண்டு மகள்கள் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில், லாலுவின் இரண்டு மகன்கள் பீகார் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது

கணபதி சுப்ரமணியம்

தேர்தலில் களமிறங்கும் லாலுவின் மகள்கள்

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் இரண்டாவது மகளான ரோகிணி ஆச்சாரியா மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி முடிவு செய்துள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள சாரன் தொகுதியில் இவர் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சரான ராஜீவ் பிரதாப் ரூடியை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

ரோகிணி ஆச்சாரியா

லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்ட போது தனது ஒரு சிறுநீரகத்தை தனது தந்தைக்கு உறுப்பு தானம் அளித்தவர் ரோகிணி என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் தனது கணவருடன் வசித்து வந்த ரோகினி தேர்தல் களம் காணும் லாலு குடும்பத்தைச் சேர்ந்த ஆறாவது நபர் ஆவார்.

மீசா பாரதி

லாலுவின் இன்னொரு மகள் மீசா பாரதி மக்களவை தேர்தலில் பாடலிபுத்திரா தொகுதியில் போட்டியிடுகிறார். பாரதிய ஜனதா கட்சி இவருக்கு எதிராக மூத்த தலைவர் ராம் கிருபால் யாதவ் போட்டியிடுவார் என அறிவித்துள்ளது.

அரசியலில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள்

லாலு பிரசாத் யாதவின் இரண்டு மகள்கள் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில், லாலுவின் இரண்டு மகன்கள் பீகார் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தேஜஸ்வி யாதவ் மற்றும் தேஜ் பிரதாப் யாதவ் இருவரும் பிஹார் மாநிலத்தில் அமைச்சர்களாக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவி ரபடி தேவி இருவரும் பிகார் சட்டமன்ற உறுப்பினர்களாக முதல்வர் இருக்கையில் அமர்ந்தவர்கள். லாலு பிரசாத் யாதவ் நாடாளுமன்ற உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் குடும்பத்தின் கொடியை டெல்லியிலும் நாட்டியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் விட்டத்தை சட்டமன்றத்தில் பிடித்த ஆர்ஜேடி

2019 மக்களவைத் தேர்தலில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதால், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. மீசா பாரதி சென்ற மக்களவைத் தேர்தலிலும் பாடலிபுத்திரா தொகுதியில் போட்டியிட்டார் என்பதும் அப்போது ராம் கிருபால் யாதவ் வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேஜஸ்வி யாதவ்

பின்னர் சட்டசபை தேர்தலில் லாலுவின் கட்சிக்கு அதிக இடங்கள் கிட்டிய நிலையில், நிதீஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். பீகார் அரசில் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவி வகித்தார். தேஜ் பிரதாப் யாதவுக்கும் மந்திரி பதவி கிட்டிய நிலையில், லாலு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் அமைச்சர்களாக திகழ்ந்தனர்.

”நிதிஷ் - பாஜக கூட்டணியை வீழ்த்துவதே குறி”

சமீபத்தில் நிதிஷ் குமார் மீண்டும் தனது கூட்டணியை மாற்றி பாஜகவுடன் கைகோர்த்துள்ள நிலையில், அமைச்சர்களாக இருந்த லாலுவின் மகன்கள் தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக மட்டும் உள்ளனர். இந்நிலையில்தான் ரோகிணி ஆச்சாரியாவை இந்த வருட மக்களவைத் தேர்தலில் களம் இறக்க ராஷ்ட்ரிய ஜனதாதளம் முடிவு செய்துள்ளது.

எப்படியாவது நிதீஷ் குமார் - பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அதே சமயத்தில் பாஜக ராம் விலாஸ் பாஸ்வான் மகனான சிராக் பாஸ்வான் உள்ளிட்டோரை தனது கூட்டணியில் இணைத்துள்ளது.

பாஜக வேட்பாளர்கள் யார்? யார்?

வெற்றிமுனைப்பில் பாரதிய ஜனதா கட்சி கிரிராஜ் சிங், நித்தியானந்த ராய், மற்றும் ஆர் கே சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை பீகார் மாநிலத்தில் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. அதே சமயத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே பாஜக வேட்பாளர் பட்டியலில் இடம் பெறவில்லை. முன்பு அவர் போட்டியிட்ட பக்சர் தொகுதியில் மிதிலேஷ் திவாரி போட்டியிடுவார் என பாஜக பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அஜய் நிஷாத் மற்றும் செட்டி பாஸ்வான் ஆகியோருக்கும் பாஜக இந்த முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை. முன்னாள் மத்திய அமைச்சர்களான ரவி சங்கர் பிரசாத் மற்றும் ராதா மோகன் சிங் ஆகியோர் பிஹார் மாநிலத்தில் பாஜக சார்பாக மக்களவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார்கள். பல நட்சத்திர வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாலும், நிதிஷ் குமாரின் கூட்டணி மாற்றம் மீண்டும் மாற்றங்களை உருவாக்கியுள்ளதாலும், பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் இந்த முறை மிகவும் பரபரப்பாக இருக்கும் என கருதப்படுகிறது.