இந்தியா

லாலு பிரசாத் மீது புதிய ஊழல் வழக்கை பதிவு செய்தது சிபிஐ - தொடரும் ரெய்டு!

லாலு பிரசாத் மீது புதிய ஊழல் வழக்கை பதிவு செய்தது சிபிஐ - தொடரும் ரெய்டு!

ஜா. ஜாக்சன் சிங்

பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் மீது புதிய ஊழல் வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

1990-களில் பிகார் முதல்வராக லாலு பிரசாத் பதவி வகித்த போது மாட்டுத் தீவனம் வாங்குவதாக கூறி, போலி ஆவணங்கள் மூலம் அரசு கருவூலத்தில் இருந்து ரூ.950 கோடியை மோசடி செய்ததாக அவர் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 5 வழக்குகளில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்புதான் லாலு பிரசாத்துக்கு 5-வது வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. தற்போது அவர் உடல்நலக்குறைவால் ஜாமீனில் வெளியே இருக்கிறார்.

இந்நிலையில், லாலு பிரசாத் 2004 முதல் 2009 வரை மத்திய ரயில்வே அமைச்சராக பதவியில் இருந்தபோது, ரயில்வே பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ததில் ஊழல் முறைகேடுகள் நடைபெற்றதாக சிபிஐ தற்போது புதிய வழக்கை பதிவு செய்துள்ளது. ரயில்வே பணியிடங்களுக்கு அந்தக் காலக்கட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பலர், லாலு பிரசாத்துக்கு கைமாறாக நிலங்கள் மற்றும் சொத்துகளை வழங்கியதாக சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது. இதில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் சிபிஐ தெரிவிக்கிறது.

இதுதொடர்பாக பிகாரில் உள்ள லாலு பிரசாத் வீடு உட்பட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர். லாலு பிரசாத் மட்டுமல்லாமல் அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பார்தி ஆகியோர் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சிபிஐ தொடர்ந்துள்ள இந்த புதிய வழக்கானது ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை மிரட்டும் மத்திய அரசின் முயற்சி என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.