இந்தியா

லக்கிம்பூர் விவகாரம் - அமைச்சர் மகனின் ஜாமீன் தொடர்பாக உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

லக்கிம்பூர் விவகாரம் - அமைச்சர் மகனின் ஜாமீன் தொடர்பாக உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

ஜா. ஜாக்சன் சிங்

லக்கிம்பூர் சம்பவத்தில் மத்திய அமைச்சரின் மகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை ரத்து செய்யக் கோரிய மனு தொடர்பாக உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் மோதியது. இதில் 4 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் ஒரு பத்திரிகையாளர் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் உச்ச நீதிமன்றத்தின் தொடர்ச்சியான தலையீட்டுக்கு பிறகு ஆசிஷ் மிஸ்ராவை போலீஸார் கைது செய்தனர். அவருக்கு எதிராக சிறப்புப் புலனாய்வுக் குழு 5,000 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் ஏற்கனவே இவரது ஜாமீன் மனுக்கள் அடுத்தடுத்து கீழமை நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டு வந்தன. கடைசியாக, அலகாபாத் உயர் நீதிமன்றம் ஆசிஷ் மிஸ்ராவுக்கு கடந்த பிப்ரவரி 10-ம் தேதி ஜாமீன் வழங்கியது. இதற்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் சார்பிலும், உத்திரபிரதேசத்தை சேர்ந்த 2 வழக்கறிஞர்கள் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான வாத - பிரதிவாதங்கள் கடந்த 4-ம் தேதி முடிவடைந்த நிலையில், அன்றைய தினம் வழக்கின் தீர்ப்பானது, தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீனை எதிர்த்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி ரமணா, நீதிபதி சூரிய காந்த் உள்ளிட்டோர் அடங்கிய அடங்கிய அமர்வு நாளை தீர்ப்பளிக்கவுள்ளது.