இந்தியா

திருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு ! ஊழியர்களிடம் விசாரணை

திருப்பதியில் மாயமான 16 ஆயிரம் லட்டு ! ஊழியர்களிடம் விசாரணை

திருப்பதி திருமலை ஏழுமலையான கோவிலில் லட்டு வழங்கும் கவுண்ட்டரில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். அவர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போதெல்லாம், லட்டுகளும் அதிக அளவில் விற்பனையாகும். தற்போது புரட்டாசி முடிந்து ஐயப்பசி மாதம் தொடங்கிவிட்டது. ஆனாலும் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் குறைந்தபாடில்லை. தொடர் விடுமுறை என்பதாலும் வட மாநிலங்களில் தசரா விடுமுறை என்பதால் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதி திருமலையில் குவிந்துள்ளனர்.

இதனையடுத்து திருப்பதியில் ஏழுமலையானின் பிரசாதமாக கருதப்படும் லட்டு அமோகமாக விற்பனையாகி வருகிறது. புரட்டாசி மாதத்தில் ஒரே நாளில் மட்டும் 5 லட்சம் லட்டுகள் கூட விற்பனையாகி வந்தது. இது சாதனை யாகும். இதற்கு முன், கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரே நாளில் 4 லட்சத்து 64 ஆயிரத்து 152 லட்டுகள் விற்கப்பட்டதே சாதனையாக இருந்தது என கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு வழங்கும் கவுண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த 10- ஆம் தேதி தொடங்கி திருப்பதி திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருடவாகன சேவை 14- ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் சாமி தரிசனத்திற்காக 4 லட்சம் பக்தர்கள் திருப்பதி மலையில் திரண்டனர்.அவர்களில் பெரும்பாலானோர் இலவச தரிசனத்திற்காக சென்றிருந்தனர். 14- ஆம் தேதி சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இலவச தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தனர். இலவச தரிசனத்திற்காக செல்லும் பக்தர்களின் வரிசையில் லட்டு வாங்குவதற்கான டோக்கன்கள் வழங்கப்படும். சுவாமி தரிசனத்துக்கு பின்பு வெளியே வந்து லட்டு விற்பனை கவுண்ட்டரில் டோக்கன்களை ஸ்கேன் செய்து லட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். போலி டோக்கன் விற்பனைகளை தடுக்க பார்கோட் ஸ்கேன் செய்யப்படுகிறது. 

பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளான கடந்த 14ம் தேதி கருடசேவை தினத்தன்று தேவஸ்தனம் சார்பாக ஒரு உத்தரவு வந்தது. அதில் "பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. எனவே மக்களுக்கு உதவும் வகையில் செயல்படுங்கள். ஸ்கேன் செய்வதில் பிரச்சனை இருந்தாலும் கண்டுக்கொள்ள வேண்டாம்" என்பதுதான் அது. ஆனால் இந்த உத்தரவை சாதகமாக பயன்படுத்தி ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள 16 ஆயிரம் லட்டுகள் முறைகேடாக விற்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஏழுமலையான் கோவிலில் பிடிக்கப்படும் லட்டுகளை டிரேக்களில் அடுக்கி கண்வேயர் பெல்ட் மூலம் கவுண்ட்டர்களுக்கு அனுப்புவது வழக்கம். ஒவ்வொரு டிரேயிலும் 51 லட்டுகள் இருக்கும்.

இதனை கருடசேவை முடிந்த பின் தேவஸ்தான் அதிகாரிகள் பெறப்பட்ட டோக்கன்களை வைத்தும், விற்பனை செய்யப்பட்ட லட்டு எண்ணிக்கையையும் கணக்கிட்டு பார்த்துள்ளனர். அப்போது கருடசேவை நாளன்று விற்பனை செய்யப்பட்ட லட்டுக்களின் எண்ணிக்கைக்கும் பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட டோக்கன்களி்ன் எண்ணிக்கைக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தேவஸ்தான அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் திருப்பதி திருமலை தேவஸ்தான ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஒப்பந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.