இந்தியா

இஸ்ரோ விஞ்ஞானி கொலைக்கு தன்பாலின உறவே காரணம் - போலீசார்

இஸ்ரோ விஞ்ஞானி கொலைக்கு தன்பாலின உறவே காரணம் - போலீசார்

webteam

இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆய்வக உதவியாளர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ் ஹைதராபாத் அமீர்பேட்டை அண்ணப்பூர்ணா குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். அவரது மனைவி இந்திரா சென்னையில் தங்கி வங்கியில் வேலைப்பார்த்து வருகிறார். 

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சுரேஷ் பணிக்கு வராததால் உடன் வேலை செய்பவர்கள் அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவர் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை. இதையடுத்து அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சுரேஷ் வசிக்கும் அபார்ட்மெண்டில் குடியிருக்கும் அவரது உறவினர்கள் அவரின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது 

சுரேஷ் கொலைசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கொடுக்கப்பட்டு தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கொலை தொடர்பாக விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ் கொலை தொடர்பாக ஆய்வக உதவியாளர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தான் காசுக்காக விஞ்ஞானி சுரேஷுடன் தன்பாலின உறவில் ஈடுபட்டதாகவும், ஆனால் அவர் பணம் தரவில்லை என்றும் அதனால் கோபத்தில் கொன்றதாகவும் கொலையாளி ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

போலீசார் வெளியிட்ட தகவலின்படி, ஆய்வக உதவியாளரான ஸ்ரீனிவாஸ், ரத்த மாதிரிகளை சேகரிப்பதற்காக விஞ்ஞானி சுரேஷ் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அவருடன் தன்பாலின உறவை எதிர்பார்த்த சுரேஷ், தன்னுடன் உறவு வைத்துக்கொண்டால் பணம் தருவதாகவும் கூறியுள்ளார். அதன் பிறகு அவர்கள் தன்பாலின உறவில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பேசியபடி சுரேஷ் பணம் தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீனிவாஸ், விஞ்ஞானி சுரேஷை கொலை செய்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.  மேலும் கொலைக்குற்றவாளி வீட்டில் இருந்து சுரேஷின் மோதிரம், ரூ.10ஆயிரம் ரொக்கம், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.