இந்தியா

சீக்கியர்களை அவமானப்படுத்துகிறார் அமீர்கான் - இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்

சீக்கியர்களை அவமானப்படுத்துகிறார் அமீர்கான் - இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்

சங்கீதா

இந்திய ராணுவம் மற்றும் சீக்கியர்களை அவமானப்படுத்தும் விதமாக அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் அமைந்து இருப்பதால், அந்தப் படத்தை புறக்கணிக்குமாறு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார்.

சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த மான்டி பனேசர் இங்கிலாந்து லூட்டனில் பிறந்து வளர்ந்தவர். சுழற்பந்து வீச்சாளரான இவர், கடந்த 2006-ம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி சார்பாக களமிறங்கி விளையாடியுள்ளார். அந்தப் போட்டியில், சச்சின் டெண்டுல்கரை வீழ்த்தி தனது முதல் விக்கெட்டை பதிவு செய்தவர் மான்டி பனேசர். தொடர்ந்து ஒருநாள், முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்துள்ளார். இந்நிலையில், 40 வயதான இவர், அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அதுல் குல்கர்னி எழுத்தில், அத்வைத் சந்தன் இயக்கத்தில், அமீர்கான், கரீனா கபூர், மோனா சிங், நாக சைதன்யா ஆகியோர் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியான திரைப்படம் ‘லால் சிங் சத்தா’. ஹாலிவுட்டின் கிளாசிக் படமான ‘பாரஸ்ட் கம்ப்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது. எனினும் கடந்த 2015-ம் ஆண்டு இந்தியாவில் சகிப்புத் தன்மை குறைந்து வருவதால், நாட்டை விட்டு குழந்தைகளுடன் வெளியேறி விடலாம் என்று மனைவி கூறியதாக அமீர்கான் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்ததும், ‘பிகே’ படத்தில் இந்து மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததாலும், தொடர்ந்து அமீர்கான் படங்களுக்கு எதிர்ப்பு கிளப்பிவந்தநிலையில், இந்தப் படத்திற்கும் ஆரம்பம் முதலே #BoycottLalSinghChadda என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வந்தது.

இதனால் நேற்று படம் வெளியாகிய முதல் நாளே திரையரங்குகளில் 15 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் வரையிலான பார்வையாளகளே நிரம்பி இருந்தனர். மேலும் 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் எதிர்ப்பு காரணமாக, முதல் நாளில் 11.50 கோடி ரூபாய் மட்டுமே வசூலை ஈட்டியது. இந்நிலையில்தான் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மான்டி பனேசர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மான்டி பனேசர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஃபாரெஸ்ட் கம்ப் படம், அமெரிக்க ராணுவத்திற்கு ஏற்றவாறு பொருந்தியது. ஏனெனில் வியட்நாம் போருக்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய அமெரிக்கா குறைந்த ஐ.க்யூ (IQ) கொண்ட ஆட்களை நியமித்ததால் அந்த கதாபாத்திரம் பொருத்தமாக இருந்தது. ஆனால் ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் இந்திய ஆயுதப்படை, இந்திய ராணுவம் மற்றும் சீக்கியர்களை மொத்தமாக அவமானப்படுத்தியுள்ளது!! இந்தப் படம் அவமரியாதை, அவமானகரமானதுக்குள்ளதாக இருக்கிறது. #BoycottLalSinghChadda” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் "இந்த ‘லால் சிங் சத்தா’ படத்தில் அமீர்கான் ஒரு முட்டாள் போன்று நடிக்கிறார். 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்திலும் ஒரு முட்டாள் கதாபாத்திரம் இருந்தது!! அவமரியாதை. அவமானகரமானத்துக்குரிய இந்தப் படத்தை புறக்கணிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.