நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வெளியான வீடியோக்கள் விவகாரத்தில் தானும், தனது மகன் பிரஜ்வால் ரேவண்ணாவும் விசாரணைக்குத் தயாராக இருப்பதாக மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான H D ரேவண்ணா தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிரஜ்வாலை கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், எஞ்சிய 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடந்து முடிந்த ஹசன் தொகுதியில் பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் வேட்பாளரும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வால் ரேவண்ணா மீது பாலியல் புகார் எழுந்துள்ளது.
நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து வீடியோ எடுத்து வைத்துக்கொண்டதாக பிரஜ்வால் ரேவண்ணா மீது புகார் எழுந்துள்ளது. இந்த வீடியோக்கள் வெளியாகி கர்நாடக அரசியலில் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. யார் இந்த பிரஜ்வால் ரேவண்ணா என்று பார்க்கலாம்.
முன்னாள் பிரதமரும், கர்நாடகத்தின் முன்னாள் முதலமைச்சருமாக இருந்தவருமான தேவகவுடாவுக்கு 2 மகள்கள், 4 மகன்கள் உள்ளனர். இவர்களில் H D ரேவண்ணா, H D குமாரசாமி ஆகியோரும், அவர்களின் மனைவியரும் அரசியலில் இருக்கிறார்கள்.
குமாரசாமி கர்நாடக முன்னாள் முதலமைச்சராக இருந்தவர். இவரது மகன் நிகிலும் அரசியலில் உள்ள நிலையில், H D ரேவண்ணாவின் இரண்டு மகன்களான சூரஜ் ரேவண்ணா, பிரஜ்வால் ரேவண்ணா இருவரும் அரசியலில் உள்ளனர். இதில் ரேவண்ணா, அமைச்சராக இருந்தவர், எம்எல்ஏவாக இருப்பவர். இவரது இளைய மகன் பிரஜ்வால் ரேவண்ணா ஹசன் தொகுதியின் தற்போதைய எம்பியாக இருப்பதோடு அதே தொகுதியில்தான் மீண்டும் போட்டியிடுகிறார்.
இந்நிலையில்தான் பாலியல் துன்புறுத்தல் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இவரது தந்தை ரேவண்ணா மீதும் புகார் எழுந்துள்ள நிலையில், தானும் தனது மகனும் விசாரணைக்கு தயாராக இருப்பதாகவும், தங்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால், சட்டத்திற்குட்பட்டு எந்த நடவடிக்கைக்கும் தயாராக இருப்பதாகவும் ரேவண்ணா கூறியுள்ளார்.
பிரஜ்வால் ரேவண்ணா மீதான புகார் குறித்து விசாரிக்க கர்நாடக அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. அவர் மேல் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354 ஏ, 354 டி, 506 மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் ஹோலநரசிப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், ரேவண்ணா மற்றும் பிரஜ்வால் ரேவண்ணா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்.டி. குமாரசாமி தெரிவித்திருந்தார்.
மேலும் பேசிய அவர், “பிரஜ்வால் ரேவண்ணாவை ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை.. இது தனிப்பட்ட நபரின் விவகாரம், இதில் குடும்பத்தை இழுப்பது ஏன்? தேவகவுடா, குமாரசாமி பெயர்கள் இந்த விவகாரத்தில் இழுக்கப்படுகின்றன.. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்றார். ரேவண்ணா மற்றும் அவரது மகன் பிரஜ்வால் ரேவண்ணாவை கட்சியை விட்டு இடைநீக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்திருந்தார்.
பாஜக மாநில தலைவர் B Y Vijayendra-வுக்கு பிரஜ்வால் ரேவண்ணா விவகாரம் முன்கூட்டியே தெரியும் என்றும், மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே அவருக்கு இந்த வீடியோ விவகாரங்கள் தெரியவந்திருப்பதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் கடுமையாக இந்த விவகாரத்தை விமர்சிக்கின்றனர். பாஜகவினரும், பிரதமரும் ஏன் இந்த விவகாரத்தில் மௌனமாக இருக்கின்றனர் என கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி அவருக்கு அக்கட்சியில் இருந்து ஷோகேஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த குமாரசாமி, "நாங்கள் அவரைப் பாதுகாக்கப்போவதில்லை. நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம். அவரது உறவினராக மட்டுமல்ல, நாட்டின் சாதாரண குடிமகனாகவும் நாம் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்குச் செல்ல வேண்டும். நாங்கள் யாரையும் பாதுகாக்கவில்லை, இதுபோன்ற சட்ட விரோத செயல்களுக்கு எதிராக நாங்கள் போராடுவோம். யார் அரசாங்கத்தை நடத்துகிறார்களோ அவர்கள் உண்மையை அம்பலப்படுத்த வேண்டும்.
காங்கிரஸ் வேண்டுமென்றே எங்கள் குடும்பத்தின் இமேஜை சீர்குலைக்க இந்த விஷயத்தை கையில் எடுத்திருக்கிறது. இந்த பிரச்னையில் தேவகவுடாவின் பங்கோ அல்லது என் பங்கோ என்ன இருக்கிறது? நாங்கள் இதற்கு பொறுப்பேற்க முடியாது. இது முழுக்க முழுக்க பிரஜ்பால் ரேவண்ணாவின் பிரச்னை. நான் அவருடன் தொடர்பில் இல்லை. அவரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது அரசின் கடமை" எனத் தெரிவித்துள்ளார்.