இந்தியா

கேரளா: மோப்ப நாய் படை பிரிவுக்கு செல்லுமா நாய் குவி? அனுமதிக்காக காத்திருக்கும் நபர்!!

கேரளா: மோப்ப நாய் படை பிரிவுக்கு செல்லுமா நாய் குவி? அனுமதிக்காக காத்திருக்கும் நபர்!!

webteam

மூணாறில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தனது எஜமானை தேடி வந்த நாய் குவியினை  மோப்ப நாய் பயிற்சியாளர் தத்தெடுத்து வளர்க்க அனுமதி அளிக்கப்பட்டது. 

கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 63 பேர் உயிர் இழந்த நிலையில் மேலும் பலரை தேடும் பணியானது நடைபெற்று வருகிறது. இதனிடையே தன்னை வளர்த்த எஜமானின் குடும்பத்தை தேடி அலையும் குவி என்ற நாய் தற்போது மிகவும் பிரபலமாகி உள்ளது. தன்னை வளர்த்த எஜமானின் குடும்பம் நிலச்சரிவில் சிக்கி ஆற்றில் அடித்து செல்லபட்ட நிலையில் அண்மையில் குவி என்ற நாய் தனது மோப்ப சக்தி மூலமாக, எஜமானின் 2 1/2 வயது குழந்தையை தனுஷ்காவின் சடலத்தை மீட்டது.

இந்நிலையில் இந்த மீட்பு பணிக்காக பெட்டிமுடி வந்த கேரளா மாநில மோப்ப நாய் பயிற்சியாளரான அஜித் கடந்த 2 நாள்களாக குவியின் செயல்பாடுகளால் அதிகம் ஈர்க்கபட்டு அதற்கு உணவு அளித்து அதனோடு பழகி வந்துள்ளார்.  இரண்டு நாட்கள் பணி முடிந்து வீடு திரும்பிய அவர், குவியை தத்தெடுத்து வளர்க்க ஆசைப்பட்டு,  இடுக்கி மாவட்ட ஆட்சியர் மற்றும், கேரள வன விலங்கு வாரியமான வனசமரச சமீதி அமைப்பிடம் அது குறித்தான கோரிக்கையை வைத்தார். அவருக்கு குவியினை வளர்க்க தற்போது அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து அவர் கூறும் போது “ மீட்பு பணி நடைபெற்று வரும் சமயத்தில் குவியின் செயல்பாடுகள் பற்றிய செய்தியினால் ஈர்க்கப்பட்டு இந்த முடிவை எடுத்தேன். குவியை மோப்ப நாய் படை பிரிவில் சேர்க்கவும் உயர் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளேன்.” என்றார்.அஜித் ஏற்கனவே தனது வீட்டில் இரு விலை உயர்ந்த வகை நாயினை வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.