சந்தீப் கோஷ் எக்ஸ் தளம்
இந்தியா

கொல்கத்தா மருத்துவமனையில் சடலங்கள் விற்பனை? Ex Dean மீது முன்னாள் அதிகாரி வைத்த குற்றச்சாட்டுகள்!

மாணவி கொலை செய்யப்பட்ட மருத்துவமனையில் உரிமை கோரப்படாத சடலங்களின் உடல் உறுப்புகள் கடத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புதிய தகவல் எழுந்துள்ளது.

Prakash J

வடக்கு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, நாள்தோறும் பல்வேறு புதிய தகவல்கள் வந்தபடி உள்ளன. இதனிடையே வழக்கின் தீவிரத்தை உணர்ந்து உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதுடன், இவ்விவகாரத்தில் சிபிஐ விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, கொலை செய்யப்பட்ட மருத்துவர் பணிபுரிந்த மருத்துவமனையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துணை ராணுவப் படையான சிஐஎஸ்எப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் மருத்துவர் கொலையில் கைது செய்யப்பட்டிருக்கும் சஞ்சய் ராய், சம்பவத்தன்று இரண்டு முறை சிவப்பு விளக்குப் பகுதி சென்றிருப்பதும், அப்போது அவர் அதிக போதையில் இருந்ததும், அதன்பிறகே மருத்துவமனைக்குள் அவர் நுழைந்ததும் சிபிஐயின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், மாணவி கொலை செய்யப்பட்ட மருத்துவமனையில் உரிமை கோரப்படாத சடலங்களில் இருந்த உடல் உறுப்புகள் கடத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து ஆங்கில ஊடகங்களில் வெளியான தகவலின்படி, குறிப்பிட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மீது முன்னாள் துணை கண்காணிப்பாளர் அக்தர் அலியேவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார். இதையடுத்து இவ்விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: ஐபிஎல் தொடரால் கோடிகளில் புரளும் பிசிசிஐ... ஒரே ஆண்டில் இத்தனை ஆயிரம் கோடிகள் லாபமா?!

இதுதொடர்பாக அக்தர் அலி அந்த ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ”அந்த மருத்துவமனையில் உரிமை கோரப்படாத அடையாளம் தெரியாத சடலங்களை, சந்தீப் கோஷ் விற்பனை செய்துவந்தார். அத்துடன் மருத்துவக் கழிவுகளை வங்கதேசத்துக்கு கடத்தும் கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். இதுதொடர்பான விசாரணைக் குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். இந்த விசாரணைக் குழுவில் சந்தீப் கோஷ் குற்றவாளி என ஆதாரங்களுடன் நிரூபித்தோம். ஆனாலும் சந்தீப் கோஷ்மீது மேற்குவங்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த அறிக்கையை சமர்ப்பித்த நாளிலேயே நான் அந்த மருத்துவமனையில் இருந்து பணியிடம் மாற்றம் செய்யப்பட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “இந்தக் குழுவில் இருந்த மற்ற இருவரும் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவரிடமிருந்து மாணவர்களைக் காப்பாற்ற என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். ஆனால் நான் அதில் தோல்வியடைந்தேன். எந்தவொரு ஒப்பந்தமாக இருந்தாலும் சந்தீப் கோஷுக்கு 20% கமிஷன் கொடுக்கப்பட்டாக வேண்டும் என்பது எழுதப்படாத ஒன்றாக இருந்தது. மருத்துவ மாணவர்களைத் தேர்ச்சிபெற வைக்க லஞ்சம் கேட்டார். பணம் தராத மாணவர்களை வேண்டுமென்றே ஃபெயிலாக்கினார்.

அதுபோல் முதலில் சந்தீப் கோஷ் பணம் வாங்கியபிறகே, பணிக்கான ஆணைகளை வழங்குவார். சந்தீப் கோஷுக்கு பெரிய இடம்வரை செல்வாக்கு இருந்தது. அதனாலேயே அவர் அங்கிருந்து இரண்டு முறை மாற்றப்பட்டபோதும் மீண்டும் அவரே அங்கு தலைவராக்கப்பட்டார். சந்தீப் கோஷ் போன்றோர் சமூகத்துக்கு ஆபத்தானவர்கள். அவர்களை உடனடியாக காவலில் வைக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஐசிசி தலைவராகும் ஜெய் ஷா? ஆதரவு தெரிவிக்கும் நாடுகள்!

மருத்துவரின் கொலைக்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில் ராஜினாமா செய்த சந்தீப் கோஷ், ராஜினாமா செய்த சில மணி நேரங்களிலேயே வேறொரு மருத்துவக் கல்லூரியில் மாற்றப்பட்டார். இருப்பினும், கொல்கத்தா உயர்நீதிமன்றம், அடுத்த உத்தரவு வரை சந்தீப் கோஷை மற்ற மருத்துவ கல்லூரியில் நியமனம் செய்யக் கூடாது உன உத்தரவிட்டுள்ளது. தற்போது அவர், சிபிஐ விசாரணையில் உள்ளார் எனக் குறிப்பிடத்தக்கது.

இந்த மருத்துவமனையில் நிதி முறைகேடு நடைபெறுவதாக கடந்த ஜூன் மாதம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. போலீசார் நிதி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். அதன்பேரில், போலீசார் சந்தீப் கோஷ் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

2021-இல் இருந்து முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த ஐ.ஜி.பிரணாப் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்கப்பட்டது. இந்த குழு சந்தீப் கோஷ் மருத்துவமனை முதல்வராக இருந்த காலத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த இருக்கிறது. சந்தீப் கோஷை சுற்றி பல்வேறு சர்ச்சை மர்ம முடிச்சுகள் வெளியாகி வருவது, மேற்கு வங்க அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.

இதையும் படிக்க: ”ஷேக் ஹசினாவை எங்க நாட்டுக்கு உடனே அனுப்புங்க..” - இந்தியாவிடம் வலியுறுத்திய வங்கதேச எதிர்க்கட்சி!