இந்தியா

அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்

அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்

ச. முத்துகிருஷ்ணன்

கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்யும் முன்பே அமேசான், கூகுள், ஃபேஸ்புக் என 3 பெரிய நிறுவனங்களில் பணி நியமன ஆணையை பெற்று அசத்தியுள்ளார்.

கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர் பிசாக் மொண்டல். இவர் அமேசான், கூகுள், ஃபேஸ்புக் என 3 பெரிய நிறுவனங்களில் பணி நியமன ஆணையை பெற்றுள்ளார். அமேசான், கூகுளை விட ஃபேஸ்புக் நிறுவனம் அதிக ஊதியம் தர முன்வந்ததால் அங்கு பணியில் சேர அவர் முடிவு செய்துள்ளார்.

ரூ.1.8 கோடி சம்பளத்தில் லண்டனில் வேலை!

இன்னும் கல்லூரிப் படிப்பை முடிக்க ஒரு செமஸ்டர் மீதமிருக்கும் நிலையில் மாணவர் பிசாக் மொண்டலுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் தர முன்வந்துள்ள ஊதியம் ரூ.1.8 கோடி ஆகும். இந்த ஆண்டு ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் பெற்ற மிக உயர்ந்த ஊதியம் இதுவாகும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் லண்டனுக்கு பறந்து ஃபேஸ்புக்கில் இணைந்து பணியாற்ற உள்ளார் மொண்டல்.

3 பெருநிறுவனங்களிடம் இருந்து ஒரே நேரத்தில் பணிநியமன ஆணை:

"கடந்த சில வாரங்களாக, அமேசான், Facebook மற்றும் Google ஆகியவற்றிலிருந்து முழு நேர வேலைக்கான பணி நியமன ஆணைகளை பெற்றுள்ளேன், விரைவில் பெரிய நிறுவனங்களில் ஒன்றில் சேரப் போகிறேன் என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் உற்சாகமாகவும் பணிவாகவும் இருக்கிறேன். நீண்டநாள் ஆசை. இந்த அற்புதமான வாய்ப்புகளுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்,” என்று மொண்டல் கூறினார்.

“இன்டர்ன்ஷிப்கள்தான் இவ்வளவு பெரிய வேலை பெற உதவியது”

“செவ்வாய் இரவு எனக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில், கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, பல நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் செய்தேன். எனது பாடத்திட்ட ஆய்வுகளுக்கு வெளியே அறிவைச் சேகரிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். இது நேர்முகத் தேர்வில் வெற்றிபெற எனக்கு உதவியது'' என்றார் மொண்டல்

கொரோனாவுக்கு பிறகு மிகப்பெரிய வேலைவாய்ப்பு!

கூகுள் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்களை விட அதிக சம்பள பேக்கேஜ் வழங்கியதன் காரணமாக ஃபேஸ்புக்கை தேர்ந்தெடுத்ததாக மொண்டல் கூறினார். தொற்றுநோய்க்குப் பிறகு மாணவர்கள் இவ்வளவு பெரிய அளவிலான சர்வதேச வேலைவாய்ப்பை பெறுவது இதுவே முதல் முறை என்று ஜாதவ்பூர் பல்கலைக்கழக வேலை வாய்ப்பு அதிகாரி சமிதா பட்டாச்சார்யா தெரிவித்தார்.

அங்கன்வாடி ஊழியர் மகன் To ரூ.1.8 கோடி சம்பளம் வாங்கும் ஃபேஸ்புக் ஊழியர்:

மொண்டல் வங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர். அங்கன்வாடி ஊழியரான மொண்டலின் தாயார் “இது எங்களுக்கு மிகவும் பெருமையான விஷயம். அவர் சிறுவயதில் இருந்தே சிறந்த மாணவர். அவர் பெரிய உயரங்களை எட்டுவதற்கு நாங்கள் மிகவும் போராடினோம். படிப்பில் எப்போதும் தீவிரமாக இருந்தார். உயர்நிலைத் தேர்வுகள் மற்றும் கூட்டு நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்ற பிறகு, அவர் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்றார்," என்று கூறினார்.

நெருக்கடியான சூழலிலும் கைகூடிய வேலைவாய்ப்பு!

ஃபேஸ்புக் நிறுவனம் வருவாய் இலக்குகளை அடையத் தவறியதால் புதிய வேலை வாய்ப்புகளை அந்நிறுவனம் குறைத்துக்கொண்டிருக்கிறது. இந்த நெருக்கடியான நேரத்தில் மிகப்பெரிய ஊதியத்தில் மொண்டலின் பணியமர்த்தல் வந்துள்ளது. கடந்த ஆண்டு ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் ஒரு கோடி சம்பளத்திற்கு வேலைவாய்ப்பை பெற்ற நிலையில் மொண்டல் அவர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளி ரூ. 1.8 கோடி சம்பளத்திற்கு ஃபேஸ்புக்கில் நியமனம் செய்து அசத்தியுள்ளார்.