முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் pt web
இந்தியா

கொல்கத்தா | பெண் பயிற்சி மருத்துவர் கொடூரமாக கொலை.. உண்மைகள் மூடிமறைப்பா? விசாரணையில் திடுக் தகவல்

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை மும்முரமாக நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மூன்றாவது முறையாக விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

PT WEB

கொல்கத்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு மேற்கு வங்காளத்தில் மருத்துவர்கள் போராட்டம் நீடித்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் மருத்துவசேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளன.

கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை

மாணவி படுகொலை நிகழ்ந்த மருத்துவமனை சுற்றுப்பகுதிகளில் அசம்பாவிதங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் அங்கு ஒரு வார காலத்திற்கு போராட்டம் நடத்த மாநில அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையே மருத்துவர் மரணம் தொடர்பாக மருத்துவக்கல்லூரி முன்னாள் பிரின்சிபால் சந்தீப் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் 3ஆவது நாளாக இன்று விசாரணை செய்து வருகின்றனர். நேற்று ஏற்கனவே 13 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், இன்று மீண்டும் சந்தீப் கோஷிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக பாலியல் வன்கொடுமை நடந்ததாக கூறப்படும் கருத்தரங்க அறை அவசரமாக புதுப்பிக்கப்பட்டது குறித்து சந்தீப் கோஷிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். சம்பவம் தொடர்பான தகவல் முதலில் கிடைத்த உடன் அவர் யாரையெல்லாம் தொடர்பு கொண்டார், என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்பதை சிபிஐ விசாரித்து வருகிறது.

பெற்றோர் சம்பவம் நடந்த இடத்திற்குச் செல்வதற்கு, அனுமதி பெறுவதற்காக 3 மணி நேரம் காத்திருக்க வேண்டியது ஏன்? அவர்களை உடலைப் பார்க்க அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டது ஏன்? என பல்வேறு கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் எழுப்பினர். மேலும் உடற்கூறு நடந்தபோது யார் பொறுப்பாக இருந்தது? என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டன? அந்த விவரங்கள் யாருக்கெல்லாம் தெரிவிக்கப்பட்டது? போன்ற அனைத்து விஷயங்களையும் சிபிஐ விசாரித்து வருகிறது.

இவ்வழக்கில் சந்தேகிக்கப்படுபவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை உள்ளிட்ட ஆய்வுகளை செய்ய டெல்லியிலிருந்து தடய அறிவியல் நிபுணர்கள் கொல்கத்தா வந்துள்ளனர். இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாக கூறி டாக்டர் குணால் சர்க்கார் மற்றும் டாக்டர் சுபர்னோ கோஸ்வாமி மற்றும் பாஜக தலைவர் லாக்கெட் சாட்டர்ஜி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராயிடம் சிபிஐ அதிகாரிகள் உளவியல் சோதனையும் நடத்தினர்.