சந்தீப் கோஷ் எக்ஸ் தளம்
இந்தியா

கொல்கத்தா மருத்துவர் கொலை | Ex Dean-க்கு எதிராக நிற்கும் பழைய வழக்குகள்.. யார் இந்த சந்தீப் கோஷ்?

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் கொலை நடந்த மருத்துவமனையில் முன்னாள் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் பற்றி வரும் பகீர் தகவல்கள்தான் மேற்குவங்கத்தில் மட்டுமல்லாது, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

வடக்கு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, நாள்தோறும் பல்வேறு புதிய தகவல்கள் வந்தபடி உள்ளன. இதனிடையே அம்மருத்துவமனையில் முன்னாள் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் பற்றி வரும் பகீர் தகவல்கள்தான் மேற்குவங்கத்தில் மட்டுமல்லாது, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மருத்துவமனையில் அவர் முதல்வராக இருந்த காலத்தில் நிதி முறைகேடு நடைபெற்றதாக சந்தீப் கோஷ்மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, கொலை செய்யப்பட்ட மருத்துவமனையில் கேட்பாரற்றுக் கிடந்த சடலங்களையும் அதன் உடல் உறுப்புகளையும் கடத்தி வங்கதேசத்தில் உள்ள விற்பனைக் குழுவுக்கு அவர் விற்றதாக, முன்னாள் அதிகாரி ஒருவர் சந்தீப் கோஷ்மீது குற்றஞ்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கிடையே, அவரது வீட்டருகே குடியிருந்தவர்கள் ‘சிசேரியன் மூலம் குழந்தை பெற்றெடுத்திருந்த என் மனைவியை, 14 நாட்களுக்குப் பிறகு கொடூரமாக சந்தீப் கோஷ் தாக்கினார். அண்டை வீட்டாரிடம் அவர் சண்டை போட்டார்’ என குற்றஞ்சாட்டியுள்ளனர். இதன் காரணமாகவே அவர் வீட்டை விற்றுவிட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. தற்போது, பெண் மருத்துவர் கொலை தொடர்பாக, சிபிஐ இவரிடம் கடுமையாக விசாரணை நடத்திவருகிறது. அந்த வகையில், இந்த வழக்குகளும் அவருக்கு எதிராகச் சேர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: கொல்கத்தா மருத்துவர் கொலை: 1973-ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தை எடுத்துக்காட்டிய தலைமை நீதிபதி!

இவர் மருத்துவமனையின் முதல்வராக இருந்தபோதுதான் அந்தப் பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்பேரிலேயே, அவர் விசாரணை வளையத்தில் உள்ளார். முன்னதாக, தனது பதவியை ராஜினாமா செய்த சந்தீப் கோஷுக்கு வேறோர் இடத்தில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ஆனால், கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதை நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

யார் இந்த சந்தீப் கோஷ்?

மேற்கு வங்க மாநிலத்தின் பங்கானைச் சேர்ந்த சந்தீப் கோஷ், 1989இல் உயர்நிலைக் கல்வியை முடித்தார். அதன்பிற்கு, 1994ஆம் ஆண்டு RG கர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றார். கோஷ் 2021இல் RG கர் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டபோது பிரபலமானார்.

இந்தப் பதவிக்கு அவர் வருவதற்கு முன், கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றினார். எலும்பியல் பேராசிரியர் மற்றும் அறுவைசிகிச்சை நிபுணராக அவர் பெயர் பெற்றிருந்தபோதும், முதல்வர் பணியில் வலுவான நற்பெயரை நிலைநிறுத்த போராடினார். எனினும், தொழில்முறை முறைகேடுகளால் அவர் சர்ச்சைக்குள்ளானார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். இதனால், முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரிக்கு அவர் மாற்றப்பட்டார். பின்னர், மீண்டும் சில நாட்களில் RG கர் மருத்துவக் கல்லூரியில் நியமனம் செய்யப்பட்டார். என்றாலும் அவரைச் சுற்றிய சர்ச்சைகள் மட்டும் நின்றபாடில்லை எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ஐபிஎல் தொடரால் கோடிகளில் புரளும் பிசிசிஐ... ஒரே ஆண்டில் இத்தனை ஆயிரம் கோடிகள் லாபமா?!