இந்தியா

மட்டன், சிக்கன் என விருந்து வைத்து கைதிகளை குஷிபடுத்திய கொல்கத்தா சிறை: ஏன் தெரியுமா?

மட்டன், சிக்கன் என விருந்து வைத்து கைதிகளை குஷிபடுத்திய கொல்கத்தா சிறை: ஏன் தெரியுமா?

JananiGovindhan

நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நவராத்திரி நாளையோடு (அக்.,05) முடிவுக்கு வருகிறது. இதனால் தாண்டியா, கர்பா போன்ற நடனங்களை ஆடியும், பூஜைகள் செய்தும் மக்கள் தங்களது கொண்டாட்ட மனநிலையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை வெகு விமர்சியாக கொண்டாடப்படும் நிலையில் கொல்கத்தாவில் உள்ள சிறை கைதிகளுக்கு சிறை நிர்வாகம் சார்பில் சைவ, அசைவ விருந்து கொடுத்து ஜமாய்த்திருக்கிறார்கள்.

கொல்கத்தாவின் Presidency Central Correctional Home என்ற சிறையில் உள்ள 2500 கைதிகளுக்கு அக்டோபர் 2 முதல் 5ம் தேதி வரை தடபுடலாக விருந்து கொடுக்கிறார்கள். மகா அஷ்டமியாக இருப்பதால் நேற்று (அக்.,03) மட்டும் சைவ விருந்து வழங்கப்பட்டிருக்கிறது.

மற்றபடி காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் அசைவம் சைவம் என எல்லா வகை உணவும் வழங்கப்படுகிறது. துர்கா பூஜையை எப்போதும் வங்காளிகள் சிறப்பாக அசைவ உணவு உண்டு கொண்டாடுவது வழக்கம். இந்த பாரம்பரியத்தை கடைபிடிக்கும் விதமாகவே கொல்கத்தா சிறை நிர்வாகமும் கைதிகளுக்கு விருந்து வைக்கிறது.

அதன்படி, “கைதிகளுக்கு சைவத்தில் கிச்சுரி, புலாவ், லுச்சி, தம் ஆலு, பன்னீர் மசாலா, நவரத்னா குருமா போன்ற சைவ உணவுகளும், இனிப்புகளில் ரசகுல்ல, லட்டுவும், அசைவத்தில் மட்டன் பிரியாணி, மட்டன் கலியா, மீன் வகைகள், இறால் உணவுகள், ஃப்ரைட் ரைஸ், சில்லி சிக்கன் உள்ளிட்டவும் மெனுவில் இடம்பெற்றிருக்கின்றன” என சிறையின் அதிகாரி கூறியிருக்கிறார்.

இந்த விருந்து உபசாரம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வந்தாலும் மேற்கு வங்கத்தின் முன்னாள் கல்வி, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சரான பார்தா சட்டர்ஜி WBSSC-இன் பள்ளி சேவை ஆணைய பணி நியமனத்தில் முறைகேடு செய்த புகாரில் சிறையில் இருப்பதால் அவருக்கு சகல வசதியை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த விருந்து முன்னெடுக்கப்பட்டிருக்கிறது என குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை சிறை நிர்வாகம் முற்றிலும் மறுத்திருக்கிறது. சிறை வாழ்க்கையில் கைதிகளுக்கு சில ரிலாக்சேஷன் கொடுக்க வேண்டும் என்பதற்காக முக்கியமான பண்டிகைகளில் இவ்வாறு விருந்து வைப்பது வாடிக்கையான ஒன்று எனவும் தெளிவுபடுத்தியிருக்கிறது.