மேற்கு வங்கம் மாநிலம் கொல்கட்டாவில் காவலர்கள் இருவர் இளைஞரின் கோரிக்கையை ஏற்று கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மா தானம் செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டு மிக மோசமான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் கொல்கத்தாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ட்விட்டரில் ஒரு கோரிக்கை விடுத்திருந்தார். அதில் தன் தந்தைக்கு கொரோனா பாதிக்கப்பட்டு மிக மோசமான நிலையில் இருக்கிறார் என்றும் அவருக்கு பிளாஸ்மா தானம் தேவைப்படுகிறது எனவும் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து கொல்கத்தாவைச் சேர்ந்த இரு காவலர்கள், இளைஞரின் கோரிக்கையை ஏற்று பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள அந்த இளைஞர் "பிளாஸ்மா தானம் ட்விட்டரில் கேட்பது என்னுடைய கடைசி முயற்சியாக இருந்தது. இதற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை" என்றார் அவர்.