சிபிஐ இணை இயக்குநர் பங்கஜ் ஸ்ரீவத்சவா நேரில் ஆஜராக மேற்குவங்க காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க, அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று சென்றனர். அப்போது அவர்களை கொல்கத்தா காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர் சிபிஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்பு விடுவிக்கப்பட்டனர். இதனால் மேற்குவங்க மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆணையர் ராஜீவ்குமார் இல்லத்திற்கு விரைந்த முதல்வர் மம்தா பானர்ஜி, அம்மாநில டிஜிபி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து சிபிஐ அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்தும், நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை காக்க வலியுறுத்தியும் முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவை தொடங்கி நடத்தி வருகிறார். மேலும் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் மத்திய அரசு, கூட்டாட்சி அமைப்பை சிதைக்கப் பார்க்கிறது என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க சென்ற விவகாரத்தில், சிபிஐ இணை இயக்குநர் பங்கஜ் ஸ்ரீவத்சவா நேரில் ஆஜராக கொல்கத்தா காவல்துறை தரப்பில் சம்மன் தரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சிபிஐ அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிபிஐ இணை இயக்குநர் பங்கஜ் ஸ்ரீவத்சவா சிபிஐ அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்த டெல்லி சென்றுள்ளார்.
இதனிடையே மம்தா பானர்ஜியின் போராட்டத்துக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.