இந்தியா

“மாட்டுக்கு இருக்கும் பாதுகாப்பு கூட பெண்களுக்கு இல்லை”: பசு முகமூடி அணியும் பெண்கள்..!

“மாட்டுக்கு இருக்கும் பாதுகாப்பு கூட பெண்களுக்கு இல்லை”: பசு முகமூடி அணியும் பெண்கள்..!

webteam

கொல்கத்தாவைச் சேர்ந்த 24 வயது புகைப்படக் கலைஞரான சுஜத்ரோ கோஷ், இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பையும், பசு மாட்டுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பையும் ஒப்பிட்டு ஒரு புதுவித பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.

”இந்தியாவில் மாடுகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம்கூட பெண்களுக்கு அளிக்கப்படவில்லை என்பது அமைதியின்மையை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை பெண்களுக்கு எதிரான குற்றம் நடக்கிறது. இந்துக்களால் புனிதமாக கருதப்படும் பசு மாட்டை காட்டிலும் பாலியல் வல்லுறவு அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களுக்கான நீதி தாமதமாகவே கிடைக்கிறது. இத்தகைய அநீதிக்காக நான் பசுப் பாதுகாவலர்களிடமும், பெண்களை வல்லுறவு செய்பவர்களுடனும் நேரடியாக மோதிக்கொண்டிருக்க முடியாது. அதனால், எனது புகைப்படக் கலையை இதற்காக நான் பயன்படுத்தினேன்.” என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிந்துள்ளார் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான சுஜட்ரோ கோஷ்.

”வன்கொடுமை குற்றம் புரிந்தவர்களை தண்டிக்க பல நாட்களாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. ஆனால் பசுக்களைக் கொன்றால், பசுவைக் கொன்றவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டால், இந்துத்துவ கும்பலால் உடனே கொல்லப்படுகிறார்கள் அல்லது தாக்கப்படுகிறார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ”பசு முகமூடியணிந்த பெண்களின் புகைப்படங்களை, இந்த அநீதிக்கு எதிரான மெளனப் போராட்டமாகவும், கலை வடிவிலான பிரச்சாரமாகவும் இருக்கும். இந்தியாவில் பல்வேறு இடங்களில் இத்தகைய புகைப்படங்களை எடுக்குமாறு எனக்கு கடிதங்கள் குவிந்து வருகிறது. இதனால் எனக்கு கொலை மிரட்டல்கள் வருகிறது. அதைக்கண்டு நான் பயப்படப்போவதில்லை. முகமூடி பசுக்கள் யாருக்கும் மிரண்டு போகாமல், தொடர்ந்து முன்னேறும்” என்கிறார் கோஷ்.

பசுக்களின் பெயரால் நடக்கும் தாக்குதல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகியவற்றிற்கு எதிராக நடக்கும் இந்த கலை வடிவிலான போராட்டத்திற்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.