கொல்கத்தா Facebook
இந்தியா

மருத்துவர் கொலை வழக்கு: கொல்கத்தா விரையும் சிபிஐ... விடாமல் தொடரும் மாணவர்கள் போராட்டம்

PT WEB

கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், மத்திய புலனாய்வு அமைப்பு இன்று விசாரணையை தொடங்குகிறது. அதேசமயம், பல்வேறு கோரிக்கைகளுடன் மருத்துவர்களின் போராட்டமும் நீடிக்கிறது.

வடக்கு கொல்கத்தாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயதான பெண் பயிற்சி மருத்துவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்த நிலையில், இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.

தற்போது அவர் போலீஸ் காவலில் உள்ள சூழலில், அழுத்தம் காரணமாக மருத்துவ மாணவி கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, டெல்லியில் இருந்து சிபிஐ குழு ஒன்று கொல்கத்தா விரைந்துள்ளது. சிபிஐ குழு தனது விசாரணையை இன்று தொடங்குகிறது. பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர், பணியில் இருந்த சக மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், கைதான சஞ்சய் ராய் உள்ளிட்டோரிடம் சிபிஐ குழு விசாரணை நடத்துகிறது.

இதனிடையே, மருத்துவ மாணவி கொலைக்கு நீதிக் கேட்டு மருத்துவச் சங்கங்களின் போராட்டம் 3ஆவது நாளை எட்டியுள்ளது. நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, ஃபோர்டா மருத்துவச் சங்கத்தினர் தங்களது கோரிக்கை ஏற்கப்பட்டதாக கூறி போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

அதேசமயம், தேசிய மருத்துவச் சங்கங்களின் கூட்டமைப்பு தனது போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளது. இதற்கிடையில் கொல்கத்தா அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரத்தில் 2 வாரத்திற்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், மருத்துவக் கல்லூரி மற்றும் நிறுவனங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம், பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதில், ” மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் ஆசிரியர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்க வேண்டும். அனைத்து முக்கிய பகுதிகளையும் சிசிடிவி காட்சிகள் மூலம் கண்காணிக்க வேண்டும்.

மருத்துவ மாணவர்களுக்கு எதிரான வன்முறையை கல்லூரி நிர்வாகம் உடனடியாக விசாரிக்க வேண்டும். மற்றும் காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். வன்முறை சம்பவங்கள் குறித்த விரிவான நடவடிக்கை அறிக்கையை, சம்பவம் நடந்த 48 மணி நேரத்திற்குள் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அனுப்பப்பட வேண்டும். “ என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.