கொல்கத்தா மருத்துவமனை எக்ஸ் தளம்
இந்தியா

கொல்கத்தா | கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோர் பேசியதாக வைரல் ஆகும் ஆடியோ - உண்மை என்ன?

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட பின்பு, அவருடைய பெற்றோருக்கு மருத்துவமனை தரப்பிலிருந்து மூன்று போன் கால்கள் சென்றுள்ளதாக, ஆடியோ க்ளிப் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Prakash J

வடக்கு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, நாள்தோறும் பல்வேறு புதிய தகவல்கள் வந்தபடி உள்ளன. அந்த வகையில், பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட பின்பு, அவருடைய பெற்றோருக்கு மருத்துவமனை தரப்பிலிருந்து மூன்று போன் கால்கள் சென்றுள்ளதாக அவர்கள் பேசியது போன்ற ஆடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வைரலாகும் அந்த ஆடியோவின்படி, முதல் போன்கால், காலை 10.53 மணிக்குச் சென்றதாக அந்த மருத்துவரின் பெற்றோர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். அப்போது, அந்த அழைப்பில் பேசியுள்ள நபர், தன்னை மருத்துவமனையின் உதவி கண்காணிப்பாளர் எனத் தெரிவித்துள்ளார். அந்தப் போனை மருத்துவரின் தந்தை எடுத்துள்ளார். அப்போது நடைபெற்ற உரையாடலை ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதன் உரையாடல் வருமாறு...

இதையும் படிக்க: ஆந்திரா| ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மாநிலங்களவை எம்பிக்கள் 2 பேர் ராஜினாமா.. ஜெகனுக்கு மேலும் பின்னடைவு!

மருத்துவரின் தந்தை: ”என்ன நடந்தது, தயவுசெய்து சொல்லுங்கள்?”

அழைப்பாளர்: ”அவள் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது, தயவுசெய்து சீக்கிரம் வாருங்கள்”.

தந்தை: ”என்ன நடந்தது என்று சொல்லுங்கள்?”

அழைப்பாளர்: “டாக்டர் சொல்வார், நீங்கள் வேகமாக வாருங்கள்”.

தந்தை: ”நீங்கள் யார்?”

அழைப்பாளர்: ”நான் சீனியர் உதவியாளர். டாக்டர் அல்ல”

தந்தை: ”அங்கு டாக்டர்கள் இல்லையா?”

அழைப்பாளர்: ”நான் சீனியர் உதவியாளர். உங்கள் மகளை எமர்ஜென்சிக்கு கொண்டுவந்துள்ளோம். நீங்கள் வந்து எங்களை தொடர்புகொள்ளுங்கள்”. (இதைக் கேட்டதும் மருத்துவரின் தாயார் வாங்கிப் பேசுகிறார்).

மருத்துவரின் தாய்: ”அவளுக்கு என்ன ஆனது, அவள் வேலையில் இருந்தாளே?”

அழைப்பாளர்: ”நீ சீக்கிரம் வா”.

இதையும் படிக்க: இந்திய பணக்காரர் பட்டியல்| முதல் இடத்துக்கு முன்னேறிய கவுதம் அதானி! 2ம் இடத்தில் அம்பானி!

இந்த உரையாடலுக்குப் பிறகு அதே பெற்றோருக்கு இரண்டாவது அழைப்பு சென்றுள்ளது. இந்த அழைப்பின்போது, ஒரு ஆண் குரல் கேட்கிறது. அதற்குள் பெற்றோர் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டனர்.

அழைப்பாளர்: ”நான் RG காரிலிருந்து (மருத்துவமனை) பேசுகிறேன்”.

மருத்துவர் தாய்: ”ஆம், தயவுசெய்து சொல்லுங்கள்”.

அழைப்பாளர்: ”நீங்கள் வருகிறீர்களா, இல்லையா?”

தாய்: ”ஆம், நாங்கள் வருகிறோம். அவள் இப்போது எப்படி இருக்கிறாள்?”

அழைப்பாளர்: ”நீங்கள் வாருங்கள், நாம் பேசுவோம். RG கார் மருத்துவமனையின் மார்புப் பிரிவு HODக்கு வாருங்கள்”.

தாய்: ”சரி”

பின்னர், அதன்பிறகு அவர்களுக்கு மூன்றாவது அழைப்பு செல்கிறது. மூன்றாவது அழைப்பில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு அவள் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. இந்த அழைப்பை முதலில் பேசிய உதவி கண்காணிப்பாளரே பேசியுள்ளார்.

மருத்துவர் தந்தை: ”வணக்கம்”.

அழைப்பாளர்: ”நான், அசிஸ்டண்ட் கண்காணிப்பாளர்”.

தந்தை: ”ஆம்”.

அழைப்பாளர்: ”உங்கள் மகள் ஒருவேளை தற்கொலை செய்துகொண்டிருக்கலாம். அவர், இறந்துவிட்டார். போலீஸும் நாங்களும் இங்கே இருக்கிறோம். தயவுசெய்து சீக்கிரம் வாருங்கள்”.

தந்தை: ”நாங்கள் உடனே வருகிறோம்”.

தாய் (பின்னணியில் கத்துகிறார்): ”என் மகள் இப்போது இல்லையா?”

இருப்பினும் இந்த ஆடியோ க்ளிப் போலியானது என்று என்று திரிணாமுல் எம்பி சகெட் கோகலே தெரிவித்துள்ளார். இந்த ஆடியோ தொடர்பாக கொலை செய்யப்பட்ட மருத்துவரின் பெற்றோருக்கு எதுவும் தெரியவில்லை என்று அவர் தன்னுடைய எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக, தங்களை 3 மணி நேரம் காத்திருக்கச் செய்ததாக பெற்றோர் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த தாமதம் வேண்டுமென்றே செய்யப்பட்டதாகவும் அவர்கள் சந்தேகித்துள்ளனர். ஆனால், கொல்கத்தா காவல் துறை இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. மதியம் 1 மணியளவில் பெற்றோர் மருத்துவமனைக்குச் சென்றதாகவும், 10 நிமிடங்களுக்குப் பிறகு, அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட கருத்தரங்கு மண்டபத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றதாகவும் கூறியுள்ளது.

இதையும் படிக்க: லக்னோ அணியில் ரோகித் சர்மா? ரூ.50 கோடி கொடுத்து வாங்குவதா? முற்றுப்புள்ளி வைத்த உரிமையாளர்!